தனது கடைக்கு முன் டெலிக்கொம் மலேசியாவின் குத்தகையாளர்கள் ஏற்படுத்திய துளையை சரி செய்ய கோரி விண்ணப்பம் செய்த லீ காங் ஹன் (வயது 36) என்ற வர்த்தகர், டெலிகொம் மலேசியாவின் மெத்தனப் போக்கினாலும் அலட்சியப் போக்கினாலும் ஏமாற்றம் அடைந்து, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தின் உதவியை நாடினார்.
இது குறித்து மே 31- ல், போர்ட் கிள்ளான், டெலிகொம் மலேசியாவிற்கு கடிதம் அனுப்பினோம். கடிதம் அனுப்பியப் பிறகு எந்த பதிலும் இல்லாத வேளையில், பல முறை தொலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டு பேசிய பொது, ‘நாங்கள் அதனை கவனிக்கிறோம், ஒருவர் வந்து கவனிப்பார், இதன் விவரத்தை மிக விரைவில் தெரிவிக்கிறோம்’ என்று கூறியே இரண்டு மாதங்களுக்கு மேல் இழுக்கடித்து விட்டனர் என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி செல்வி து.ரேவதி.
அதன் பிறகு, கடந்த ஆகஸ்டு 1-ம் திகதி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ இவ்விவகாரத்தை செய்தியாளர்கள் பார்வைக்கு கொண்டு சென்றப் பிறகு, (07.08.2012) காலை 11.30 மணியளவில் டெலிக்கொம் மலேசியாவின் குத்தகையாளர்கள் உட்பட அதன் அதிகாரிகள் சிலர் உடன் களம் இறங்கி தற்காலிகமாக பலகையினால் மூடியது மட்டுமில்லாமல், வரும் வியாழக்கிழமைக்குள் நிரந்தர தீர்வாக அதனை அடைப்பு செய்வோம் என உத்தரவாதம் அளித்துள்ளனர் என மேலும் விளக்கினார் அவர்.
டிஎம் ஒரு பெரிய நிறுவனம். மக்களுக்கு தொலை தொடர்பு சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் மக்களின் உயிரிலும் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்துவதில் ஏன் இந்த மெத்தனப் போக்கை கடைபிடித்துள்ளது என வினவிய சார்ல்ஸ் பலர் இந்த துளையில் விழுந்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை பொருட்படுத்தாமல் செயல்படுவதை டிஎம் உடனே நிறுத்துமாறும் இது போன்று சம்பவங்கள் மறுபடியும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
முன்னதாக இத்துளையை மூட டிஎம்-க்கு 10 நாட்கள் வழங்கப் பட்டது மட்டுமில்லாமல், அதை செய்யத் தவறினால் டிஎம்-க்கு எதிராக சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாகக் சார்ல்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.