மெர்டேகா கருப்பொருளைக் காப்பியடிக்கும் அளவுக்கு பக்காத்தானில் சிந்தனை வறட்சி

மாற்றரசுக்கட்சிகளிடம் சிந்தனை வறட்சி நிலவுகிறது அதனால்தான் பிஎன் அரசு உருவாக்கியதைத் திருடிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல், தொடர்பு,பண்பாட்டு அமைச்சர் ரயிஸ் யாத்திம் கூறுகிறார்.

அவர்கள் அறிவித்த மெர்டேகா கருப்பொருளைத் தகவல் அமைச்சு 2009-இலேயே ஒற்றுமை மீதான அதன் கையேடுகளில் பயன்படுத்தியுள்ளது என்றாரவர்.

மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு சொந்த கருப்பொருளை உருவாக்கிக் கொண்டது ஓர் அரசியல் நாடகம் என்றும் பிஎன் அடைந்துள்ள வெற்றிகளைச் சிறுமைப்படுத்துவதே அவர்களின் நோக்கம் என்றும் அமைச்சர் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்கில் கூறினார்.

“அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.சிந்தனை வறட்சியும் நிலவுகிறது.மத்திய அரசு அடைந்துள்ள வெற்றிகளையும் நிறைவேற்றிய வாக்குறுதிகளையும் எண்ணி பொறாமை கொள்கிறார்கள். 

“அதனால், தகவல் அமைச்சு பயன்படுத்தியதைத் திருடி அதைத் தாங்கள் உருவாக்கிய ஒன்று எனக் கூறுகிறார்கள்”, என்று ரயிஸ் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளான “55ஆண்டு சுதந்திரம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன” என்பதனை ஏற்பதற்கில்லை என்று அறிவித்துள்ள பக்காத்தான் ரக்யாட் மாற்றரசுக்கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்கள் மூன்று வெவ்வேறு கருப்பொருள்களில் இவ்வாண்டு தேசிய நாளைக் கொண்டாடும் என்று கூறியுள்ளது.

கெடா அரசாங்கம் “Terus Berbakti” (தொடரும் சேவை) என்ற கருப்பொருளில் தேசிய நாளைக் கொண்டாடும். கிளந்தான் “Menerajui Perubahan” (மாற்றத்துக்கு முன்னோடி) என்ற கருப்பொருளையும் பினாங்கும் சிலாங்கூரும் “Sebangsa, Senegara, Sejiwa” (ஒரே தேசியம், ஒரே நாடு,ஒரே மூச்சு) என்ற கருப்பொருளையும் கொண்டிருக்கும்.

மூன்று வெவ்வேறு கருப்பொருள்களைக் கொண்டிருப்பதே மாற்றுக்கட்சிகள் ஓர் உடன்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதைக் கான்பிக்கிறது என்று ரயிஸ் கூறினார்.

“அது அவர்களுக்கிடையில் கருத்தொற்றுமை இல்லை என்பதைக் காட்டுகிறது.இதை வைத்து மக்களே ஒரு முடிவுக்கு வரலாம்”, என்றாரவர்.

ரயிஸ், தொலைத்தொடர்பு, தகவல் தொழில் மீதான 9வது ஏபெக் அமைச்சர்நிலை மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா சென்றிருக்கிறார்.

TAGS: