சரவாக் சட்டமன்ற உறுப்பினர் பிஎன்னிலிருந்து விலகல்

சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி(எஸ்பிடிபி)யுடன் நீண்டகாலமாக தகராறு செய்துகொண்டிருந்த மெலுவான் சட்டமன்ற உறுப்பினர் வொங் ஜுடாட், அக்கட்சியிலிருந்து விலகி சரவாக் தொழிலாளர் கட்சி(SWP) யில்சேர ஆயத்தமாகி வருகிறார்.

ஜுடாட் நேற்று கட்சிவிலகல் கடிதத்தைக் கட்சித் தலைமையகத்தில் சேர்பிக்கச் சென்றதாகவும் ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் அதை ஏற்க மறுத்ததாகவும் சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி கூறியது.

கடிதம் கட்சித்தலைவர்களிடம்தான் கொடுக்கப்படவேண்டும் என்றும் ஆனால், அவர்கள் அப்போது அங்கில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ஜுடா, தம் கடிதத்தை அவர்களிடமே கொடுத்துவிட்டு தலைவர்களுக்குத் தனியே எழுதுவதாகவும் கூறினார்.

எஸ்பிடிபி-இலிருந்து விலகுவதற்கு ஜூலாவ் எம்பி, ஜோசப் சாலாங் கண்டுமுடன் கொண்டுள்ள கருத்துவேறுபாடுதான் காரணம் என்று ஜுடாட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மெலுவான் சட்டமன்றத் தொகுதி ஜுலாவில்தான் உள்ளது.

தம் முடிவு இறுதியானது என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் SWP சார்பில்   ஜுலாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் அவர் பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார்.

ஜூடாட் SWP-இல் சேர்வதற்கு மனுச் செய்திருப்பதாகக் கூறப்படுவதை உறுதிப்படுத்த அதன் தலைவர் லேரி எஸ்இங்(வலம்) மறுத்தார்.நேரம் வரும்போது அது பற்றித் தெரிவிப்பதாகக் கூறினார்.

எஸ்பிடிபி, சரவாக் பிஎன் கட்சிகளில் ஒன்றாகும். மாநில சமூக மேம்பாட்டு அமைச்சர் வில்லியம் மாவன் அதன் தலைவர்.

சரவாக் தொழிலாளர் கட்சி, அண்மையில் பிஎன்னில் இன்னொரு பங்காளிக் கட்சியான பார்டி ரக்யாட் சரவாக்கிலிருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும்.

அது பிஎன்னுக்கு நட்புறவான கட்சி என்று கூறிக்கொண்டாலும் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் அது அக்கூட்டணியில் சேரும் வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டார்.

 

 

TAGS: