தூய்மையான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமலிருப்பதை அரசாங்கத்துக்கு நினைவுறுத்த 26என்ஜிஓ-கள் சேர்ந்து மாற்று மெர்டேகா தின ‘கவுண்ட்டவுன்’(countdown) நிகழ்வு ஒன்றை நடத்தும்.
அந்நிகழ்வு Janji Bersih (தூய்மையான வாக்குறுதி) என்ற தலைப்பில் நடைபெறும் என்று கூறிய பெர்சே இயக்கக்குழுத் தலைவர் ஏ.சமட் சைட், அதில் கலந்துகொள்ள விரும்புவோர் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்கான போராட்டத்தைக் குறிக்க மஞ்சள் ஆடை அணிந்திருக்க வேண்டும் என்றார்.
பெர்சே பெயரில் அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும் சமட் வலியுறுத்தினார்.ஏனென்றால், பெர்சேயில் இணைந்துள்ள 80-க்கு மேற்பட்ட என்ஜிஓ-களில் 26 மட்டுமே இதுவரை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன.மற்றவை விரைவில் இணையலாம் என்றாரவர்.
Janji Bersih என்பது பிஎன் அரசு Janji Ditepati (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்ற கருப்பொருளில் மெர்டேகா தினத்தைக் கொண்டாடுவதைப் பகடி பண்ணுவதுபோல் அமைந்துள்ளது தெளிவு.
“மெர்டேகா தினக் கொண்டாட்டத்தையொட்டி ‘வாக்குறுதிகள்’ பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம்.55வது மெர்டேகா தினத்தைக் கொண்டாடும் வேளையில் தூய்மையான, நியாயமான ஒரு மலேசியாவையே அனைவருமே விரும்புவர்.
“Janji Bersih என்ற கருப்பொருளைக் கொண்டாடும் முகமாக,மலேசியர்கள்- மூத்தவர்களும் இளையோரும்- அவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அன்றிரவு மஞ்சள் அணிய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் சமட் கூறினார்.
நிகழ்வு நீரூற்றுக்கருகில் நடைபெறும்
அந்நிகழ்வு இரவு மணி 10-க்குத் தொடங்கும். டாட்டாரான் மெர்டேகாவின் வடக்குப் பகுதியில் நீருற்று அமைந்துள்ள பகுதியில், மத்திய அரசின் ‘கவுண்ட்டவுன்’ நிகழ்வு நடைபெறும் திடலுக்கு அருகில் அது நடைபெறும்.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, Solidariti Anak Muda Malaysia அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின், Janji Bersih நிகழ்வு தேர்தல் நடைமுறைகளைச் சீர்படுத்த அரசாங்கத்திடம் பெர்சே முன்வைத்த எட்டுக் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவுறுத்துவதற்காக நடத்தப்படுகிறது என்றார்.
அதில் பேசிய Empower அமைப்பின் நிர்வாக இயக்குனர் மரியா சின், அது ஒரு ஆர்ப்பாட்டமோ, கண்டனக் கூட்டமோ அல்ல என்பதால் போலீஸ் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
“மஞ்சள் உடை அணிந்து, சக மலேசியர்களுடன் மெர்டேகா ‘கவுண்ட்டவுன்’ நிகழ்வைக் கொண்டாட விரும்புகிறோம்.
“அதில் ஏதேனும் தவறுண்டா?”, என்று வினவிய மரியா, அவர்கள் அதிகாரப்பூர்வ மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்விலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயல்வதாகக் கூறப்பட்டதை நிராகரித்தார்.