சிலாங்கூரில் எதிர்பார்க்கப்படும் தண்ணீர் நெருக்கடிக்குக்கு காரணம் என மாநில அரசாங்கம் மீது பழி போடப்பட்டுள்ள வேளையில் சாத்தியமான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடிக்கும் அதுவே காரணமமக இருக்கும் எனக் குறை கூறப்பட்டுள்ளது.
தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) தொடங்கியுள்ள வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டம் (CAR) மீது மாநில அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுமானால் சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதிகள் மின் நெருக்கடியை எதிர்நோக்கும் என பெர்னாமா கூறுகின்றது.
“நாங்கள் சிலாங்கூர் பொருளாதார மன்றத்துடன் 27 கூட்டங்களை நடத்தியுள்ளோம். விநியோகத்துக்கான அடிப்படை வசதிகள் முழுமையடைவதை உறுதி செய்ய மாநில அரசாங்கம் விரைவாக ஒரு முடிவு எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என டிஎன்பி உதவித் தலைவர் ரோஸிமி ரெமெலி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த CAR திட்டம் 2005ம் ஆண்டு தொடங்கியது. புக்கிட் தாரெக், ரவாங், கம்போங் சுபாடாக், கோலாலம்பூர் ஆகியவற்றுக்கு இடையில் அதிக மின் ஆற்றலைக் கொண்ட கம்பிகளைப் பொருத்துவது அந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளது.
என்றாலும் ரவாங், கம்போங் சுங்கை தெரெந்தாங்கில் எஞ்சியுள்ள 1.5 கிலோ மீட்டர் பகுதியில் அந்தக் கம்பிகளைப் பொருத்துவதற்கு மட்டுமே இப்போது அந்த பொதுப் பயனீட்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கம்போங் சுங்கை தெரெந்தாங் மக்கள் தங்கள் கிராமத்தின் வழியாக டிஎன்பி கம்பிகள் போடும் முயற்சிகளை சுகாதார, பாதுகாப்புக் காரணங்களுக்காக எதிர்த்து வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு வழங்கும் மாநில அரசாங்கம் அந்தக் கிராமம் வழியாகச் செல்லாமல் வேறு பாதையில் கம்பிகளைப் போடுமாறு தெனாகாவை கேட்டுக் கொண்டுள்ளதாக ரோஸிமி தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை டிஎன்பி நிராகரித்து விட்டது.
சிலாங்கூரிலும் கோலாலம்பூரிலும் மின்சாரத்துக்கான தேவை அதிகரித்து வருவதாக ரோஸிமி குறிப்பிட்டார்.
மின் விநியோகத் தடைகள் ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவர் என அவர் எச்சரித்தார்.