வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவே Janji Bersih நிகழ்வு

மெர்டேகா கொண்டாட்டத்தை பெர்சே அரசியலாக்கப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டைப் புறம்தள்ளிய அதன் இணைத் தலைவர் ஏ.சமட் சைட், ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன) என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும் அரசாங்கம் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே பெர்சே நிகழ்வின் நோக்கமாகும் என்றார்.

மேலும், கவுண்ட்டவுன் முழுக்க முழுக்க பெர்சே நிகழ்வும் அல்ல,அதை ஏற்பாடு செய்வதில் வேறு 26 என்ஜிஓ-களும் சேர்ந்துகொண்டிருக்கின்றன என்றார் பாக் சமட் என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் அந்தத் தேசிய இலக்கியவாதி கூறினார்.

“Janji Bersih ( தூய்மையான வாக்குறுதி)-க்காகப் போராடுவது பெர்சே மட்டுமல்ல,பல என்ஜிஓ-கள்.அவற்றில் பெர்சே-யும் ஒன்று”.

தேசிய நாள் கொண்டாட்டத்துக்கான கவுண்ட்டவுன் நிகழ்வு நடைபெறும் இடத்தில் Janji Bersih நிகழ்வை நடத்தி மெர்டேகா கொண்டாட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் அறைகூவல் விடுத்திருப்பதற்கு சமட் நேற்று இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.

மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்வுக்குப் பொதுமக்கள் பெர்சேயின் அடையாளமாகிவிட்ட மஞ்சள் நிறத்தில் உடைகள் அணிந்து வருவதைத் தடுக்கக்கூடாது என்றும் அவர் போலீசைக் கேட்டுக்கொண்டார்.

“போலீஸ் படைத் தலைவர் பெர்சேயா, போலீஸா என்பதுபோல் இவ்விவகாரத்தைப் பார்ப்பது சரியல்ல”, என்றாரவர்.

டாட்டாரான் மெர்டேகாவில் தேசிய நாள் கவுண்ட்டவுன் நிகழ்வில் பெர்சே இயக்கமும் கலந்துகொள்ளும்.

“டாட்டாரான் மெர்டேகா காலனித்துவ எஜமானர்களிடமிருந்து விடுதலை பெற நாம் நடத்திய போராட்டத்தின் அடையாளமாகும். அங்கு நடக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதில் என்ன தப்பு?”, என்றவர் வினவினார்.

 ‘Janji Bersih’ நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் பெருந்திரளாக அதில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சமட் கேட்டுக்கொண்டார்.

TAGS: