நஸ்ரி: ஜாஞ்சி பெர்சே ( Janji Bersih ) அமைதியாக நடக்க முடியுமானால் எந்த ஆட்சேபமும் இல்லை

ஆகஸ்ட் 30ம் தேதி ஜாஞ்சி பெர்சே ( Janji Bersih ) கூட்டம் அமைதியாகவும் நாகரீகமான முறையிலும் நடத்தப்பட முடியும் என்றால் அரசாங்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அந்தக் கூட்டம் நடத்தப்பட முடியும் ஆனால் ஏற்பாட்டாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார் நஸ்ரி.

“அமைதியாக ஒன்று கூடும் சட்டம் இருப்பதால் அவர்கள் அமைதியாக கூட்டம் நடத்த விரும்பினால் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தக் கூட்டத்தில் அரசியல் பிரச்னைகளை கொண்டு வராமல் இருப்பது தான் மிக முக்கியமாகும்,” என அவர் இன்று ஈப்போவில் கூறினார்.

அவர் நோன்புப் பொருள் உதவிப் பொருட்களை வழங்கிய பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.

டாத்தாரான் மெர்தேக்காவில் இவ்வாண்டு மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களை வரவேற்கும் நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி கூட்டம் நடத்த பெர்சே எண்ணியிருப்பது பற்றிக் கருத்துரைத்த போது நஸ்ரி அவ்வாறு கூறினார்.

சபாவில் மேலும் சில அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு விரைவில் தாவக் கூடும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளது பற்றிக் குறிப்பிட்ட நஸ்ரி விரைவில் 13வது பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அது இயல்பானது எனச் சொன்னார்.

“லாஜிம் உக்கின் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் அல்லது அம்னோ தலைவர்கள் போட்டியிடுவதற்கு மீண்டும் தேர்வு செய்யப்படாமல் போகலாம். அதனால் அவர்கள் தவளைகளைப் போல இன்னொரு கட்சிக்கு விரைவாக தாவுகின்றனர். பொதுத் தேர்தலில் போட்டியிடுவதே அவர்கள் நோக்கம்.”

வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடத் தேர்வு செய்யப்படாத பிஎன் தலைவர்களை அன்வார் எதிர்த்தரப்புக்குள் இழுப்பதால் பிஎன் -னுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என நஸ்ரி மேலும் சொன்னார்.

“அன்வார் எப்போதும் கட்சிகளிலிருந்து தாவுவார். அம்னோவிலிருந்து பாஸ் கட்சிக்குச் சென்றார். அடுத்து பிகேஆர்-கட்சிக்குப் போனார். ஆகவே அது போன்ற மக்களை அவர் ஏற்றுக் கொள்வதில் வியப்பில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா

 

TAGS: