பாஸ் கட்சியில் இணையுமாறு அதன் உயர் தலைவர்களே அழைத்த பின்னரே தாம் அதில் சேர முடிவு செய்ததாகவும் ஆனால் உடனடியாக அல்ல என்றும் முன்னாள் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பாவ்சி ஷாரி கூறுகிறார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் மாட் சாபு என்ற முகமட் சாபு, உதவித் தலைவர் ஹுசாம் மூசா ஆகியோர் அழைத்த பின்னர் பாவ்சி மே 20ம் தேதி பாஸ் உறுப்பினர் ஆனார்.
முதலில் அவர் தமது வயதையும் குடும்பத்தையும் பரிசீலித்த பின்னர் மாட் சாபு, அப்துல் ஹாடி ஆகியோரது அழைப்பை நிராகரித்தார். மீண்டும் அழைக்கப்பட்ட பின்னர் -இந்த முறை கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம்- அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார்.
“நான் பாஸ் கட்சியில் சேருவதால் கட்சிக்கு வலிமை கூடும் என்றும் கட்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் ஹுசாம் சொன்னார். ஆகவே நான் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேருவது என முடிவு செய்தேன்.”
மதில் மேல் பூனையாக இருக்கின்றவர்களை இழுப்பதற்கு முன்னாள் போலீஸ் அதிகாரி என்ற முறையில் அவரது நிலை உதவும் என்றும் பாஸ் தலைவர்கள் கூறியதாகவும் பாவ்சி சொன்னார்.