நஸ்ரி: அன்வார் ‘தவளைகள் மன்னன்’

சபா பிஎன் தலைவர்களை ஈர்க்கும் அன்வார் இப்ராஹிமின் முயற்சிகள் பிஎன் -னைப் பாதிக்காது என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.

தாங்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிறுத்தப்பட மாட்டோம் என்பது கட்சி மாறியவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் பசுமையான புல்வெளியைத் தேடுகின்றனர் என அவர் சொன்னார்.

“பிஎன் நிறுத்தப் போகாதவர்களை அன்வார் எடுத்துக் கொள்ள விரும்பினால் எடுத்துக் கொள்ளட்டும். அன்வாரும் ஒரு தவளையே. அவர் தொடக்கத்தில் அபிமிலிருந்து அம்னோவுக்கு மாறினார். அடுத்து அம்னோவிலிருந்து பிகேஆர்-ருக்கு சென்றார்.”

“தம்மைப் போன்றவர்களை அவர் ஏற்றுக் கொள்வதில் எந்த வியப்பும் இல்லை. ஒரு தவளையே இன்னொரு தவளையை ஏற்றுக் கொள்ளும்,” என நஸ்ரி பாடாங் ரெங்காஸில் கூறினார்.

அவரது செய்தியை உத்துசான் மலேசியாவின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியா வெளியிட்டுள்ளது.

அன்வாருடைய அரசியல் பயணத்தைக் கருத்தில் கொண்டு அவரை ‘Bapa segala katak (தவளைகள் மன்னன்) என நஸ்ரி வருணித்தார்.

துவாரான் எம்பி வில்பிரெட் பூம்புரிங்கும் பியூபோர்ட் எம்பி லாஜிம் உக்கினும் பிஎன் -னிலிருந்து விலகி பக்காத்தான் ராக்யாட்டுடன் இனைந்து கொள்வதற்கான முடிவை அறிவிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு சபா சென்றிருந்தார்.

உப்கோ எனப்படும் United Pasokmomogun Kadazandusun Murut Organisation -னின் முக்கியத் தலைவரான மைஜோல் மாஹாப் பிஎன் -னிலிருந்து விலகும் தமது முடிவை இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.