‘அடையாளக் கார்டு திட்டம் அன்வார், மகாதீர் மீது களங்கம் கண்டு பிடிக்கப்படலாம்

சபாவில் வாக்குகளுக்காக குடியுரிமை கொடுத்ததாக கூறப்படும் அடையாளக் கார்டு திட்டத்தில் பங்காற்றியதாக  முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளையில் அதே சூழலில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் சிக்கிக் கொள்ளக் கூடும்.

அந்த விஷயத்தை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் மகாதீர் ஆட்சிக்கு பாதகமாக இருக்கக் கூடும் என்றாலும்  அதே ஆட்சியில் அன்வாரும் துணைப் பிரதமராக இருந்துள்ளதாக ஜனநாயக பொருளாதார விவகாரக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல் வான் ஜான் கூறினார்.

“அம்னோவைச் சபாவுக்குள் கொண்டு சென்றதற்காக இன்னும் சிலர் அன்வார் மீது பழி போடுகின்றனர். மகாதீர் நிர்வாகம் அதனால் களங்கத்திற்கு இலக்காகும். அந்த நிர்வாகம் அனைத்து மூத்த அமைச்சர்களையும் இணங்கச் செய்திருக்க வேண்டும். அன்வார் அப்போது சம்பந்தப்பட்டிருந்தால் அவரது பெயருக்குக் களங்கம் ஏற்படும்,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் சொன்னார்.

அன்வார் மீது பழி போடக் கூடிய ஆதாரங்கள் ஏதும் வெளியாகுமானால் அது எதிர்த்தரப்புத் தலைவருக்குப் பெரிதும் பாதகமாக முடியக் கூடும்.

“அன்வார் இன்னும் அரசியலில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் மகாதீர் ஒய்வு பெற்று விட்டார். ஆகவே அது பழைய தலைமுறையான மகாதீர் அம்னோவுக்குப் பாதகமாக இருந்தாலும்  அன்வார் மீது பழி விழுந்தால் நடப்புத் தலைமுறையும்  (எதிர்த்தரப்பு) பாதிக்கப்படும்.

சபாவில் பிஎன் கூட்டணியிலிருந்து மேலும் பலர் கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக ஆர்சிஐ-யை நஜிப் அறிவித்தாலும் அம்னோவுக்கு ஏற்படக் கூடிய பாதகத்தை அவர் சரிக்கட்ட முடியுமானால் மகாதீர் நிழலிலிருந்து அவர் வெளியேறுவதற்கு இது நல்ல வாய்ப்பாகும்.

என்றாலும் அம்னோவை சபாவுக்குள் கொண்டு வந்ததற்காக சபா மக்கள் இன்னும் அன்வாரை எதிர்த்தாலும் அந்த அடையாளக் கார்டு திட்டம் பற்றிய விவரங்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு தெரிந்து விட்டது என்றும் அன்வார் மீது பழி போடப்பட்டவில்லை என்றும் அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் கூறினார்.

“ஆர்சிஐ என்ன வெளியிடப் போகிறது என்பதே முக்கியமானது. ஆனால் ஏற்கனவே பல விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக ஆவணப்படுத்தப்படவில்லையே தவிர வெளியாகி விட்டன,” என்றார் அவர்.

தாம் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் அந்த ‘வலையத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டதாக’ அன்வார் கடந்த ஆண்டு கூறிக் கொண்டுள்ளார்.

ஆர்சிஐ பயனற்றது என மகாதீரே கூறியுள்ளார். அதன் முடிவுகள் எப்படி இருந்தாலும் அம்னோவுக்குப் பாதகமாக இருக்கும் எனவும்  அவர் எச்சரித்துள்ளார்.

நஜிப் நிலை பாதுகாப்பானது

ஆர்சிஐ அம்னோவையும் மகாதீரையும் காயப்படுத்தினாலும் நஜிப் பாதுகாப்பாக இருப்பார் என ஒங் சொன்னார்.

“ஒரளவுக்கு நஜிப் மிகவும் பாதுகாப்பாக இருப்பார். ஆனால் முடிவுகள் வெளியாகும் போது அவை நிச்சயம் கடந்த காலத் தலைமைத்துவத்திற்குப் பாதகமாக இருக்கும்.”