சபா மக்கள் தொகைப் பெருக்கம் மீது விரிவாக எழுதியுள்ள புத்தக ஆசிரியர்கள் இருவர் அந்த மாநில சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என சபா மாநில பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த விஷயம் மீது முத்தாலீப் முகமட் டாவுட்-டும் சொங் எங் லியோங்-கும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். கெடாவில் பிறந்த முத்தாலீப் இப்போது சபாவில் வசித்து வருகிறார். பிபிஎஸ் தலைவராக இருந்த போது பல புத்தகங்களை வெளியிட்டுள்ள சொங் இப்போது பிகேஆர்-ல் அங்கம் பெற்றுள்ளார்.
ஆர்சிஐ குழு உறுப்பினர்கள் தொடர்பில் சபா பாஸ் மகிழ்ச்சி அடையவில்லை என அதன் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் முகமட் பிராடுஸ் முகமட் நோர் கூறினார். காரணம் அந்த விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற யாரும் குழுவில் இல்லை என்றார் அவர்.
“சபாவில் சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னையை அம்பலப்படுத்திய பல கட்டுரைகளை முத்தாலீப்-பும் சொங்-கும் எழுதியுள்ளனர்,” என அவர் விளக்கினார்.
அந்தக் குழுவுக்கு முக்கியமான இன்னொரு மனிதர் சைமன் சிபாவுன் ஆவார். அவர் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணைய உதவித் தலைவராக இருந்த போது அந்த விஷயத்தை ஆழமாக ஆய்வு செய்துள்ளார்.
“உண்மையில் சபா மக்களைப் பிரதிநிதிக்கக் கூடிய யாரும் அந்த விசாரணையில் சம்பந்தப்படவில்லை,” என்றார் முகமட் பிராடுஸ்.
சபா, சரவாக் முன்னாள் தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐவர் கொண்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொள்வதற்கு ஆறு மாத அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சபா மலேசியப் பல்கலைக்கழக துணை வேந்தர் கமாருஸாமான் அம்போன், முன்னாள் சபா சட்டத்துறைத் தலைவர் ஹெர்மன் லுப்பிங், முன்னாள் கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் ஹென்றி சின், முன்னாள் சபா மாநிலச் செயலாளர் கேஒய் முஸ்தாபா ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.