டிஏபி-யை முஸ்லிம்கள் ஆதரிப்பது ஹராம் என இஸ்லாமிய ஆசிரியர் அப்துல்லா சாஆமா சொல்லியிருப்பது, ‘விநோதமானது’, ‘தீவிரமானது’, ‘தீவிரமானது’, ‘காலத்துக்கு ஒவ்வாதது’ என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா வருணித்துள்ளார்.
அவை இஸ்லாமியப் போதனைகளை பிரதிபலிக்கவில்லை என்பதாலும் கூட்டரசு அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு புறம்பாக இருப்பதாலும் அத்தகைய கருத்துக்களை பொருட்படுத்தக் கூடாது என் மின் அஞ்சல் வழி அளித்த பேட்டியில் ஜுவாண்டா சொன்னார்.
“ஆகவே அத்தகைய தீவிரமான ஜனநாயகத்துக்குப் புறம்பான கருத்துக்களுக்கும் இடம் கொடுப்பவர்களும் அவற்றைப் பெரிதுபடுத்துகின்றவர்களும் மலேசியா போன்ற அமைதியான நாட்டில் சர்ச்சைகளை உருவாக்குகின்றவர்களும் கடைப்பிடிக்கும் போக்கு உண்மையில் ஏமாற்றத்தைத் தருகின்றது,” என்றார் அவர்.
அப்துல்லாவின் கருத்துக்களுக்கு அடிப்படை உள்ளதா என்றும் அவை சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துமா என்று வினவப்பட்ட போது ஜுவாண்டா அவ்வாறு பதில் அளித்தார்.
மலேசியா பல இன சமுதாயத்தைக் கொண்டதாகும். இஸ்லாத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவர்களுக்கும் நாட்டுக்கு நிலைத்தன்மையைக் கொண்டு வருகின்றவர்களுக்கும் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
மலேசியர்கள் குறிப்பாக முஸ்லிம்கள் நாட்டு நிர்மாணம் நமது கூட்டுப் பொறுப்பு என்பதை உணர வேண்டும். அது அரசியல்வாதிகளின் வேலை மட்டுமல்ல,” என்றும் பெர்லிஸ் முப்தி சொன்னார்.
கிளந்தான் தும்பாட்டைச் சேர்ந்த சமய ஆசிரியரான அப்துல்லா அண்மையில் முஸ்லிம்கள் டிஏபி-யை நிராகரிக்க வேண்டும் என சொன்னதாக தெரிவிக்கும் செய்தியை கடந்த வாரம் முதல் பக்கத்தில் உத்துசான் மலேசியா வெளியிட்ட பின்னர் அவர் தேசிய அளவில் பிரபலமானார்.
‘விவேகமான நடவடிக்கை அல்ல’
டிஏபி-யை “kafir harbi” (இஸ்லாத்தின் எதிரி) வகைப்படுத்த அப்துல்லா மேற்கொண்ட முயற்சியை முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பிரகடனம் எனத் தாம் கருதுவதாகவும் ஜுவாண்டா குறிப்பிட்டார். அது விவேகமான நடவடிக்கை ( tidak cerdik ) அல்ல என்றும் அவர் வருணித்தார்.
“இஸ்லாம் கடுமையானது அல்ல. அது முஸ்லிம் அல்லாதாருடன் வாதங்களை நாடவும் இல்லை. தீவிரவாதிகள் இஸ்லாத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடும்.”
டிஏபி-யை ஆதரிப்பது தவறு எனக் குறிப்பிட்ட அப்துல்லா, முஸ்லிம்கள் மசீச-வையும் மஇகா-வையும் ஆதரிப்பது தீங்கை விளைவிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காரணம் அந்தக் கட்சிகள் ‘முஸ்லிம் அரசாங்கத்தை’ ஆதரிக்கின்றன. அம்னோவுடன் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகின்றன என்றார் அவர்.
“கூட்டரசு அரசமைப்பின் கீழ் டிஏபி-யின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அது முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றது,” என அப்துல்லா சொன்னதாகவும் உத்துசான் குறிப்பிட்டுள்ளது.
“பாஸ், அம்னோ, பிகேஆர் ஆகியவற்றில் உள்ள முஸ்லிம்கள் வாக்குப் பெட்டியின் மூலம் நாட்டை தனது கட்டுக்குள் கொண்டு வர முயலும் டிஏபி-யை நிராகரிப்பது கட்டாயமாகும்.”