பக்காத்தான் வலிமையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்கிறார் சாமிவேலு

பாரிசான் நேசனல் இந்த நாட்டை வெற்றிகரமாக மேம்படுத்திய கட்சி என்ற சாதகமான நிலையைப் பெற்றுள்ள போதிலும் அது பெரிதும் எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் தனது சிறந்த பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு “கடுமையான எதிர்ப்பை” அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  மஇகா முன்னாள் தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார்.

“நல்ல பெரும்பான்மையைப் பெறுவதற்கு பிஎன் கடுமையாக போராட வேண்டிய முக்கியமான தேர்தலாக அது இருக்கும்.நாம் எதிர்க்கட்சிகளின் வலிமையை குறைத்து மதிப்பிடக் கூடாது,” என்றார் அந்த மூத்த அரசியல்வாதி.

பிஎன் தனது தலைவர் நஜிப் அப்துல் ரசாக் வழியாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் பிஎன் உறுப்புக் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும்,” என அவர் புதுடில்லியில் பெர்னாமாவுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“கடந்த காலத்தில் பல குறைகள் இருந்தன. ஆனால் பிரதமர் கடந்த காலத்தில் இழக்கப்பட்டதை சரி செய்யப் பாடுபடுகிறார்.”

இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜிகே வாசனை மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் சந்திப்பதற்காக 76 வயதான சாமிவேலு புதுடில்லிக்குச் சென்றுள்ளார்.

இந்தியாவுக்கும் தெற்காசியாவுக்கும் அடிப்படை வசதிகளுக்கான மலேசியாவின் சிறப்புத் தூதர் என்ற முறையில் அவர் வாசனைச் சந்தித்தார்.

எல்லா பிஎன் உறுப்புக் கட்சிகளும் மக்களை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்றும் சாமிவேலு வலியுறுத்தினார்.

“அங்கு ஒன்றாக செல்லுங்கள். மக்களைச் சந்தித்து அவர்கள் நம்மிடமிருந்து எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்,” என்றார் அவர்.

பிஎன்-னுக்கு சாதகமான அம்சங்கள் என்ன என்றும் அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் பிஎன் இந்த நாட்டை உருவாக்கியது. எல்லாக் குடி மக்களும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாய்ப்பை அளித்த மேம்பாட்டை அது கொண்டு வந்துள்ளது என அவர் பதில் அளித்தார்.

“அவை பிஎன் குறித்த நல்ல விஷயங்கள்,” என்றார் சாமிவேலு.

என்றாலும் இன்னும் சில குறைகளும் உள்ளன குறிப்பாக இந்திய சமூகத்திடம் உள்ளன. அடுத்த பொதுத் தேர்தலுக்குப் போவதற்கு முன்னதாக அவற்றைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா

TAGS: