அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டக் குத்தகைப் பணி ஜார்ஜ் கெண்டுக்கு கொடுக்கப்பட்டது பற்றித் இரகசியமாக தகவல் தந்தவர் நிதி அமைச்சின் உயர் அதிகாரி பவுசியா யாக்கூப் அல்ல.
இதனைத் தெரிவித்த அம்பாங் எம்பி ஜுரைடா கமருடினும் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியும் பவிசியாதான் தகவல் அளிப்பவர் என்று கூறிவரும் அம்னோ வலைப்பதிவர்கள் கூறுவது தவறு என்று கண்டித்தனர்.
“ஜார்ஜ் கெண்ட் விவகாரத்தில் தகவல் அளித்தவர் பவுசியா அல்ல என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.அக்குழுவில் அவர்தான் ஒரே பெண் என்பதால் அவரைக் குறை சொல்வது எளிதாக இருக்கிறதுபோலும்”, என்று ரபிஸி(வலம்) கூறினார்.
பவிசியாவைக் குறை சொல்வதைக் கண்டித்த பிகேஆர் மகளிர் தலைவியுமான ஜுரைடா, வலைப்பதிவில் அவரது புகைப்படத்தை வெளியிட்டிருப்பதெல்லாம் தேவையற்ற ஒன்று என்றார்.
“அது அரசு ஊழியர்கள் மாற்றரசுக் கட்சிக்குத் தகவல் அளிப்பதைத் தடுக்கும் ஒரு முயற்சி.
“அரசு ஊழியர்கள் அவர்களின் வேலையைச் செய்வதை அம்னோ மதிப்பதில்லைபோல் தெரிகிறது.அந்த ஆவணங்களை பிகேஆரிடம் கொடுத்தவர் பவுசி அல்ல என்பதை என்னால் நிரூபிக்க முடியும்”, என்றார் ஜுரைடா.