பாஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நஷாருடின் மாட் ஈசா சவூதி அரேபியாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் காணப்பட்டதாலும் ஹுடுட் மீதான பாஸ் நிலை பற்றிக் கேள்வி எழுப்பியதாலும் பாச்சோக் எம்பி பதவியைத் துறக்க வேண்டும் என கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
“அவர் பாஸ் கட்சியில் இருப்பதற்கு விரும்பவில்லை என்றால் மாச்சோக் மக்கள் அவருக்கு வழங்கிய கட்டளைக்கு தொடர்ந்து துரோகம் செய்வதை நிறுத்திக் கொண்டு எம்பி பதவியைத் துறப்பது நல்லது,” என கிளந்தான் பாஸ் இளைஞர் பிரிவுச் செயலாளர் முகமட் நூரி மாட் யாக்கோப் கூறினார்.
மலேசியாவில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை அமலாக்கும் யோசனையை டிஏபி நிராகரித்துள்ளதால் பாஸ் கட்சி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என நஷாருடின் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் பதில் அளித்தார்.
கிளந்தான் அரசாங்கம் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதை தடுத்து நிறுத்தியது கூட்டரசு அரசாங்கமாக இருக்கும் வேளையில் நஷாருடின் அம்னோ தலைவர்கள் பயன்படுத்தும் அதே வாதங்களை தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூறி வருகிறார் என முகமட் நூரி சொன்னதாக ஹராக்கா டெய்லியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நஷாருடினுடைய அண்மைய கருத்துக்கள் ‘அம்னோவுக்கு ஆதரவாக’ தெரிவதால் பாஸ் கட்சிக்கு அவர் இன்னும் விசுவாசமாக இருக்கிறாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் முகமட் நூரி கேட்டுக் கொண்டார்.
ஹுடுட் சட்டத்தை டிஏபி நிராகரித்துள்ளது மீது பாஸ் தனது நிலையை தெளிவாக அறிவிக்க வேண்டும் என நஷாருடின் மெக்காவிலிருந்து டிவி3-வின் பிரதான செய்தி அறிக்கைக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பேட்டி நேற்றிரவு ஒளிபரப்பானது.
“கட்சி உறுப்பினர் என்ற முரையில் அந்தப் பிரச்னை மீது தனது உண்மையான நிலையை பாஸ் அறிவிக்க வேண்டும் என நான் கோருகிறேன். பாஸ் கட்சிக்கும் டிஏபி-க்கும் இடையில் நிகழும் நிகழ்வுகளைக் கண்டு அடி நிலை உறுப்பினர்கள் கவலை அடைந்துள்ளனர்,” என நஷாருடின் சொன்னார்.
“இஸ்லாமிய நாட்டைத் தோற்றுவிப்பதையும் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதையும் டிஏபி-யும் அதன் தலைவர் கர்பால் சிங்-கும் தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். ஏதாவது செய்யப்பட வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து பாஸ் விலகிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.”
பக்காத்தானில் பாஸ் இருக்கும் வரையில் டிஏபி எதிர்ப்பதால் இஸ்லாமிய நாட்டையும் ஹுடுட் அமலாக்கத்தையும் முயற்சிகள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கருதுகிறார்.
மெக்காவில் நஜிப்புடன் நஷாருடின் காணப்படும் படம் ஒன்றை உத்துசான் தனது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் சிறப்பு உச்ச நிலைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ள நஜிப், சவூதி அரேபியாவைச் சேர்ந்த பல சமய அறிஞர்களைச் சந்தித்தார்.