‘நிலைக்குத்தி விட்ட அனீபா விலக வேண்டும் என பக்காத்தான் கூறுகிறது

வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் தமது கடமைகளைச் சரிவரச் செய்யவில்லை எனக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவர் பதவி துறக்க வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் கோரியுள்ளது.

நேற்றிரவு கூடிய பக்காத்தான் செயலகம் அனீபா தமது பணிகளை முறையாகச் செய்யவில்லை என்பதை ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக டிஏபி அனைத்துலகப் பிரிவுச் செயலாளர் லியூ சின் தொங் கூறினார்.

தூதர்கள் தம்மை தலைநகர் கோலாலம்பூருக்குப் பதில் தமது சொந்த மாநிலமான சபாவில் சந்திப்பதையே விரும்புவதாக அரச தந்திர வட்டாரங்களில் பேசப்படுவதாக அவர் சொன்னார்.

“அவர் கோத்தா கினாபாலுவில் மறைந்து கொண்டிருக்கிறார். சீன நாட்டுத் தூதர் தம்மை அங்கு சந்திக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்,” என இன்று நிருபர்களிடம் லியூ கூறினார்.

மலேசியா முன்னைப் போல்  சிரியா பூசல், ரோஹிங்யா, பாலஸ்தீன சமூகங்கள் போன்ற பிரச்னைகளில் தனது நிலையை வலியுறுத்தத் தவறி விட்டதாகவும் அவர் சொன்னார்.

“இன்றைய சூழ்நிலையை அன்வார் இப்ராஹிம் அமைச்சரவையில் இருந்த காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் மத்திய ஐரோப்பாவில் எழுந்த போஸ்னியா பூசலைத் தீர்ப்பதற்கு  தீவிரமாக பங்காற்றியுள்ளோம்.”

பிலிப்பீன்ஸுடனான ஸ்பிராட்லி தீவுகள் மற்றும் இதர தகராறுகள் மீது உருப்படியாக பங்காற்றாததால்  தாம் திறமை இல்லாத வெளியுறவு அமைச்சர் என்பதை அனீபா காட்டி விட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார்.

“வெளியுறவு அமைச்சுப் பொறுப்பையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்றுக் கொள்வது அவசியமாகவும் இருக்கலாம். ஏனெனில் சிரியா பூசலைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் இஸ்லாமிய மாநாட்டு நிறுவனச் சிறப்புக் கூட்டத்தில் அனீபாவுக்குப் பதில் பிரதமரே கலந்து கொள்ள வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

 

TAGS: