மக்களுக்கு வாகனங்கள் மலிவாகக் கிடைப்பதற்கு உதவியாக கலால் வரி அகற்றப்பட வேண்டும் என்ற தனது செய்தியைப் பரப்புவதற்கு பிகேஆர், நோன்புப் பெருநாளைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களை நாடியுள்ளது.
பிகேஆர் அதிகாரிகள் நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட கார்-வில்லைகளை விநியோகம் செய்வர்.
கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து அதிகமான மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ள வேளையில் அந்த இயக்கம் நேற்று தொடங்கியது.
அந்தச் செய்தியை மேலும் பரப்புவதற்காக முகநூல் பக்கத்தையும் அந்த எதிர்க்கட்சி அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் வாகனமோட்டிகளுக்கு கார் வில்லைகளை விநியோகம் செய்ய பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் கூறினார்.
“அந்தச் செய்தியைப் பரப்புவதற்காக நாங்கள் கோம்பாக் டோல் சாவடி, டூத்தா டோல் சாவடி, சுங்கை பெசி டோல் சாவடி ஆகியவற்றில் அந்த வில்லைகளை விநியோகம் செய்வோம்.”
“நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் பிகேஆர் தலைமையகத்திலும் அந்த வில்லைகள் கிடைக்கும் என்றும் நிக் நஸ்மி தெரிவித்தார்.
“கார் விலைகளை குறைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு அரசியல் பின்னணி வேறுபாடின்றி பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கார் விலைகள் மக்களுக்குச் சுமையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நேரம் வந்து விட்டது,” என்றும் அவர் சொன்னார்.