மலாய்க்காரர்கள் பினாங்கில் தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க பிகேஆருக்கு வாக்களிக்க வேண்டும்

பினாங்கு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேசனிலின் ஒரே பங்காளிக்கட்சியான அம்னோ, ‘டிஏபி தலைமையிலான’ மாநில அரசில் மலாய்க்காரர் பிரதிநிதித்துவம் குறைவு என்று அடிக்கடி குறைகூறுவதுண்டு.

ஆட்சிக்குழுவில் இரண்டு மலாய்க்கார்கள் மட்டுமே உள்ளனர்-இருவரும் பிகேஆர் உறுப்பினர்கள். அந்த வகையில் பினாங்கில் இருப்பது  டிஏபி அரசுதானே தவிர பக்காத்தான் ரக்யாட் அரசல்ல என்றும் கூறப்படுவதுண்டு. 

இந்நிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் பொறுப்பு மலாய்ச் சமூகத்துக்கு உண்டு என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான்.

பினாங்கு ஆட்சிக்குழுவில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை விரும்பினால் அவர்கள் பிகேஆருக்குத்தான் வாக்களிக்க வேண்டும், அம்னோவுக்கு அல்ல என்றாரவர்.

அதாவது, பினாங்கில் பிகேஆர் கூடுதல் இடங்களில் போட்டியிட்டு அம்னோவிடமுள்ள இடங்களைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு மலாய்க்காரர்கள் உதவ வேண்டும்.

“பினாங்கு மலாய்க்காரர்களுக்கு ஒன்றைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்ல விரும்புகிறேன். எங்களை ஆதரிக்காவிட்டால் இழப்பு அவர்களுக்குத்தான்”, என்று மலேசியாகினியிடம் மன்சூர் தெரிவித்தார்.

“பிகேஆரில் உள்ள எங்களை ஆதரிக்கவில்லை என்றால் போதுமான மலாய்ப் பிரதிநிதித்துவம் இருக்காது”, என்று பினாங்கு துணை முதலமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு டிஏபி-இன் மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர், எதிர்வரும் தேர்தலில்  பிகேஆர் அது போட்டியிடும் இடங்கள் சிலவற்றை டிஏபி-க்குக் கொடுக்க வேண்டும் என்றும் அப்படிக் கொடுத்தால் அந்த இடங்களில் டிஏபி ஆறு மலாய்க்கார வேட்பாளர்களைக் களம் இறக்குவதற்கு வசதியாக இருக்கும் என்றும் கூறியதற்கு மறைமுகமாக பதில் அளிப்பதுபோல் மன்சூர் இவ்வாறு கூறினார்.

பிகேஆருடன் ஒப்பிடும்போது டிஏபி-இன் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறதென்றும் எனவே, டிஏபி-இன் மலாய் வேட்பாளர்களைக் களமிறக்குவதே வெற்றிவாய்ப்பைப் பெருக்குவதாக இருக்கும் என்றும் சுல்கிப்ளி தம் வாதத்துக்கு நியாயம் கற்பித்தார்.

ஆனால் மன்சூர், பிகேஆர்தான் பக்காத்தானின் “பலவீனமான இணைப்பு” என்று நீண்டகாலமாகக் கூறப்பட்டு வரும் ஒரு கருத்தை மறுத்தார். அக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் கட்சிதாவியர்கள் என்ற போதிலும் அதனால் கட்சி பலவீனமடைந்து விட்டதாக அவர் எண்ணவில்லை.

பிகேஆர் உருவாகி 12 ஆண்டுகள்தான் ஆகின்றன. அக்கட்சி ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தை வைத்திருந்த நிலையை மாற்றி கடந்த பொதுத் தேர்தலில் 31 இடங்களைப் பிடித்து “பெரிய தாக்கத்தை” ஏற்படுத்தியது.

“எவ்வளவு பெரிய பாய்ச்சல் அது. பல ஆண்டுகளாக இருந்துவரும் டிஏபியுடனும் பாஸ் கட்சியுடனும் ஒப்பிடும்போது அது மிகப் பெரிய பாய்ச்சல் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்”, என்றாரவர்.

பிகேஆர் அமைக்கப்பட்டு அது 1999 பொதுத்தேர்தலில் குதித்தபோது “மிகவும் கடினமான தொகுதிகளே”, அதாவது பல இனங்கள் கலந்துவாழும் இடங்களே அதுக்கு ஒதுக்கப்பட்டன.

மூன்று உறுப்புக்கட்சிகளிடமும் ஒரு புரிதல்-  மலாய்க்காரர்கள்-அல்லாத தொகுதிகள் டிஏபிக்கு, மலாய்க்காரர்களைக் கொண்ட தொகுதிகள் பாஸுக்கு என்ற புரிதல்- இருந்தது.

“யாருக்கும் வேண்டாத தொகுதிகளை நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று…. அவை பிஎன்னின் கோட்டைகளாக விளங்கிய தொகுதிகள் என்பதால் அவற்றுக்குள் ஊடுருவுவது எளிதல்ல என்று கருதப்பட்டது.

“ஆனாலும் பிகேஆர் 2008 தேர்தலில் சிறந்த சாதனையைச் செய்து காட்டியது….இப்போது எங்கள் தொகுதிகளை மற்றவர்கள் கேட்கிறார்கள்.பிகேஆர்தான் மிகவும் பலவீனமான இணைப்பு என்றால் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது”, என்று மன்சூர் கூறினார். 

ஆனாலும், கட்சிதாவல், கட்சி விலகல் என்று பார்த்தால் பிகேஆர் கட்சியில்தான் அவை அதிகம் நிகழ்ந்துள்ளன.

அக்கட்சியிலிருந்து விலகிய எம்பிகளில் ஸஹ்ரேய்ன் ஹஷிம்(பாயான் பாரு), டான் டீ பெங்(நிபோங் தெபால்), வீ சூ கியோங்(வங்சா மாஜூ), மொஹ்சின் சம்சூரி(பாகான் செராய்) முதலானோர் அடங்குவர்.

என். கோபாலகிருஷ்ணனும் (பாடாங் செராய்), சுல்கிப்ளி நோர்டினும் (கூலிம்-பண்டார் பாரு) கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். கித்தா கட்சித் தலைவர் ஜைட் இப்ராகிம், கட்சித் தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாகக் கூறி விலகிச் சென்றார்.

இவர்களின் வெளியேற்றத்தால் பிகேஆரின் நாடாளுமன்ற இடங்கள் 31-இலிருந்து 24 ஆக குறைந்தது.

மன்சூர், இப்படிப்பட்ட கட்சித்தாவல்கள், விலகல்கள் எல்லாம் அரசியலில் சகஜம்தான் என்று நினைக்கிறார்.

“எந்தக் கட்சியில்தான் தவளைகள் இல்லை? டிஏபி-இல் இதுவரை 39 பேர் கட்சி மாறியுள்ளனர். இது அரசியல்.இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சியாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறோம்.

“அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.வெற்றிபெற்ற பின்னர் கட்சிமாற நினைப்போர் அதற்காக வருந்த வேண்டியிருக்கும்.

“இது ஒரு எச்சரிக்கைதான். இது, கட்சிமாற நினைப்போரை அதைச் செய்யுமுன்னர் பல தடவை யோசிக்க வைக்கும்”, என்றவர் குறிப்பிட்டார்.

TAGS: