பெர்சே: பேரணியின் போது முரண்பாடான உத்தரவுகள் பற்றி விளக்குங்கள்

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம்  தான் நடத்தும் விசாரணைக்கு உதவுமாறு துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரையும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் போன்ற அதிகாரிகளை அழைக்க வேண்டும் என பெர்சே கேட்டுக் கொண்டுள்ளது.

ஏப்ரல் 28ம் தேதி மகத்தான அளவில் நடைபெற்ற அந்தப் பேரணியை எதிர்கொள்வது மீது அவர்கள் இரண்டு விதமான ஆணைகளை பிறப்பித்தனரா என்று விளக்குவதற்காக அழைக்கப்பட வேண்டும்.

அன்றைய தினம் போலீஸுக்கு வழங்கப்பட்ட உத்தரவுகளை அந்த இருவரும் விளக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

“முதலாவது உத்தரவு எங்களை (பங்கேற்பாளர்களை) பரிவுடன் பார்த்துக் கொள்ளுமாறு கூறியது. அதனை சில போலீஸ் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். நாங்களும் அதற்கு ஒப்புக் கொண்டோம். பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக போலீசார் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டனர். நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என்றார் அவர்.

“அடுத்து இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பங்கேற்பாளர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அது எப்படி நிகழ்ந்தது என்பது எங்களுக்கு புரியவே இல்லை,” என அம்பிகா விளக்கினார்.

போலீஸ்காரர்களுக்கு என்ன உத்தரவுகள் கொடுக்கப்பட்டன என்பதை பெர்சே-யும் சுஹாக்காம் குழுவும் அறிந்து கொள்வது முக்கியம் என அவர் சொன்னார்.

முதலில் கொடுக்கப்பட்ட உத்தரவை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்றிடமிருந்து சுஹாக்காம் குழு செவிமடுத்துள்ளதாக அம்பிகா கருதுகிறார். இன்னொரு போலீஸ் குழு சாட்சியத்தையும் செவிமடுக்க அவர் விரும்புகிறார்.

பேரணி பங்கேற்பாளர்கள அடித்த போலீசாருக்கு யார் இரண்டாவது உத்தரவைப் பிறப்பித்தார் என்பதையும் அறிய அவர் விரும்புகிறார்.

பேரணியின் போது போலீஸ்காரர்கள் மஞ்சள் நிற பெர்சே டி சட்டைகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுவதையும் சுஹாக்காம் விசாரிக்க வேண்டும் என்றும் பெர்சே விரும்புகிறது.

நேற்று பெர்சே 3.0 பேரணியின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான மகஜர் ஒன்றை கோலாலம்பூரில் சுஹாக்காம் தலைமையகத்தில் பெர்சே-யைப் பிரதிநிதித்து அம்பிகா சமர்பித்தார்.

TAGS: