மலாய் டிஏபி தலைவர் ஒருவர் ஹுடுட் மீதான மௌனத்தைக் கலைக்கிறார்

பினாங்கைச் சேர்ந்த மலாய் டிஏபி தலைவர் ஒருவர் இறுதியில் ஹுடுட் சட்டம் மீதான மௌனத்தை கலைத்துள்ளார்.

அந்த விவகாரம் தொடர்பில் டிஏபி-யில் உள்ள மலாய் தலைவர்கள் அமைதியாக இருப்பது அவர்களுக்குத் தலைமைத்துவப் பண்புகள் இல்லை என்பதைக் காட்டுவதாக உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்று கூறியதைத் தொடர்ந்து மாநில டிஏபி குழு உறுப்பினர் சுல்கிப்லி முகமட் நோர் பதில் அளித்துள்ளார்.

முஸ்லிம்கள் அந்தச் சட்டத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் அந்த இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நாடு அமலாக்குவதற்கு “இது சரியான தருணம் அல்ல” என அவர் சொன்னார்.

ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்வதற்கு உலகில் எந்த இஸ்லாமிய நாடும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“ஆகவே புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் எடுத்துக் கொண்டு கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் வரையில் ஹுடுட் பற்றிப் பேச வேண்டாம்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“பிஎன் 55 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி புரிகிறது. மலாய் முஸ்லிம்கள் கட்சியான அம்னோ அதனை வழி நடத்துகிறது.  ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதா இல்லையா என்பதையே அதனால் இன்னும் முடிவு செய்ய இயலவில்லை.”

“20 ஆண்டுகளாக பாஸ் கிளந்தானை ஆட்சி செய்கிறது. இருந்தும் அது மாநிலத்தில் ஹுடுட் சட்டத்தை அமலாக்க முடியவில்லை,” என்றார் சுல்கிப்லி.

“அப்படி இருக்கும் போது அந்த விவகாரம் மீது தங்கள் நிலையை தெளிவுபடுத்துமாறு ஏன் சிலர் மலாய் டிஏபி தலைவர்களைக் கேட்கின்றனர் ?” என முன்னாள் பினாங்கு நகராட்சி மன்ற உறுப்பினருமான அவர் வினவினார்.

மலேசியா சமயச் சார்பற்ற நாடு

ஹுடுட் சட்டம் பாஸ் கட்சியும் அம்னோவும் வெறுமனே “பேசிக் கொண்டு தான்” இருக்கின்றன எனச் சாட்டிய சுல்கிப்லி அதன்  அமலாக்கம் மீது உறுதியான நிலையை அவை கடைப்பிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்த நாட்டின் அடிப்படை அமைப்பு சமயச் சார்பற்ற தன்மையைக் கொண்டிருப்பதால் ஹுடுட்டை அமலாக்க முடியாது என கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் சொல்வதை அவர் ஒப்புக் கொண்டார்.

 

TAGS: