எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்துவ வலைப்பதிவுக்குள் நேற்றிரவு ஊடுருவிய இணையக் கொத்தர் ஒருவர் அந்த பிகேஆர் மூத்த தலைவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறும் போலி நோன்புப் பெருநாள் செய்தியை பதிவு செய்துள்ளார்.
அந்தச் செய்தி இல்லை என உறுதி செய்த பின்னர் வலைப்பதிவு நிர்வாகிகள் அந்த ‘நோன்புப் பெருநாள்’ மன்னிப்பு செய்தியை அகற்றி விட்டனர்.
“நேற்றிரவு மணி 11.50 வாக்கில் அந்த வலைப்பதிவு தாக்குதலுக்கு இலக்கானது. அன்வாருடைய சிறப்பு உரை எனக் கூறப்பட்ட பதிவு ஒன்று சேர்க்கப்பட்டது.”
“அந்தப் பதிவு அன்வாருடையது அல்ல. போலியானது என்பதை வலைப்பதிவு நிர்வாகி உறுதி செய்ய முடியும். ஆகவே நாங்கள் நாங்கள் அந்தப் பதிவை உடனடியாக அகற்றி விட்டோம்,” என அந்த வலைப்பதிவு சீர்குலைக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட விளக்கம் கூறியது.
என்றாலும் அந்த போலி உரையின் படம் எல்லா அம்னோ ஆதரவு வலைப்பதிவுகளிலும் சேர்க்கப்பட்டு விட்டது. எதிர்த்தரப்புத் தலைவருடைய வலைப்பதிவு இணையக் கொத்தரால் சீர்குலைக்கப்பட்டது என அவை கிண்டலாக அவை குறிப்பிட்டன.
அந்தச் செய்தியின் இணைய மொழியாக்கம் இதுவாகும்:
“நான் உண்மையில் நன்கு அறிந்துள்ள, அணுக்கமாக உள்ள குறிப்பாக நஜிப் அப்துல் ரசாக்கிடமும் ரோஸ்மா மான்சோரிடமும் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில்- மன்னிப்புக் கேட்டுக் கொள்வதற்கு இந்த ஆண்டு நானும் என் குடும்பத்தாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.”
“பிரதமர் பதவி உட்பட பொறுப்புக்களை நாடும் எங்கள் குழுவில் உள்ள சிலர் ஆசை காரணமாக அளவுக்கு அதிகமாக சென்று நஜிப்யும் அவரது குடும்பத்தையும் அவதூறு கூறியுள்ளதால் பாவம் செய்துள்ளதாக நான் கருதுகிறேன்.”
பெர்சே 3.0 பேரணிக்கும் இஸ்ரேலுக்கு தாம் அளித்ததாக கூறப்படும் ஆதரவுக்காகவும் முஸ்லிம்களிடம் ‘அன்வார்’ அந்தப் போலிச் செய்தியில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அது “தேசிய ஒற்றுமைக்கு சீர்குலைவை ஏற்படுத்தி விட்டதாக” செய்தியில் கூறப்பட்டிருந்தது. அந்த இரு அம்சங்களும் அன்வாரை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
“உண்மையில் அல்தான்துயா விவகாரத்தில் தவறான தகவல் எனக்கு கிடைத்துள்ளது. அந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என அந்தப் போலிச் செய்தியில் குறிக்கப்பட்டுள்ளது.
‘அன்வார் இப்ராஹிம்’ என கையெழுத்திட்டுள்ள அந்த இணையக் கொத்தர், அத்தகைய தாக்குதல்களை அல்லது நடவடிக்கைகளை தாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாத தோழர்கள் தொடுத்த நெருக்குதலினால் தாம் அவ்வாறு செய்வதாக தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.
நஜிப்பைப் பாரட்டுவதுடன் அந்தச் செய்தி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் “மிகவும் பொருத்தமான தலைவர் என்றும் மலேசியர்களுக்கு சிறந்த நிர்வாகி” என்றும் அதில் வருணிக்கப்பட்டுள்ளது.
Google Hangout இணையத் தளத்தில் இரவு மணி 10.30க்குத் தொடங்கிய ஒரு மணி நேர உரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்வாருடைய வலைப்பதிவு தாக்குதலுக்கு இலக்கானது.