பிஎஸ்சி சிறந்த இந்திய மாணவர்களை வேலைக்குச் சேர்க்காதது குறித்து பழனிவேல் வருத்தம்

பிஎஸ்சி என்ற பொதுச் சேவை ஆணையம் வேலைக்குச் சேர்த்துள்ள 21 முதல் நிலை ஹானர்ஸ்  (first class honours) பட்டதாரிகளில் சிறந்த இந்திய மாணவர்கள் யாரும் இல்லாதது குறித்து மஇகா தலைவர் ஜி பழனிவேல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

முதல் நிலை இரண்டாம் நிலை (மேல்) பட்டங்களைப் பெற்ற பல இந்தியப் பட்டதாரிகள் (அவர்களில் சிலர் அரசாங்கப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்தவர்கள்) இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தகுதி அடைப்படையில் விரைவாக ஊழியர்களைச் சேர்க்கும் திட்டத்தின் கீழ் பிஎஸ்சி உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாகச் செல்லத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் மாஹ்முட் அடாம் நேற்று அறிவித்தார்.

அந்தத் திட்டத்தின் கீழ் 18 பூமிபுத்ரா மாணவர்களுக்கும் மூன்று சீன பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைகளை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் பொதுப் பணி அமைச்சில் பணியைத் தொடங்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த விஷயத்தைத் தாம் பல முறை அரசாங்கத்தின் கவனத்துக்கும் அண்மையில் பிஎன் உச்ச மன்றக் கூட்டங்களில்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளதாக பிரதமர் துறை அமைச்சருமான பழனிவேல் சொன்னார்.

கேட்டுக் கொள்ளப்பட்டது போல பிரதமரிடம் நிராகரிப்பட்ட இந்தியப் பட்டதாரிகள் பட்டியலை ஏற்கனவே  கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தனியார் துறைகள் வேலைகளைக் கொடுக்க முன் வருவதற்கு முன்னர் பிஎஸ்சி வேலைகளை வழங்குவது சரியான பாதையில் எடுக்கப்பட்டுள்ள நல்ல நடவடிக்கை ஆகும். என்றாலும் நல்ல தேர்ச்சிகளைப் பெற்றுள்ள இந்திய மாணவர்கள் மீது பிஎஸ்சி சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.”

“அவர்கள் முதல் நிலையைத் தேர்ச்சியைத் தவற விட்டாலும் அவர்கள் சிறந்த இரண்டாம் மேல் நிலை பட்டத்தைப் பெற்றிருந்தால் அது பிஎஸ்சி-யின் கவனத்தைப் பெறுவதற்குப் போதுமானது,” என்றும் அவர் சொன்னார்.

பெர்னாமா

 

TAGS: