டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனத் தாம் கூறியதற்காக அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் இசா தெரிவித்துள்ளார்.
ஹுடுட் சட்ட அமலாக்கத்தை கர்பால் நிராகரிப்பது இஸ்லாத்தையே நிராகரிப்பதற்கு ஒப்பாகும் என அந்த பாச்சோக் எம்பி சொன்னதாக அரசாங்கத்துடன் தொடர்புடைய மலாய் நாளேடுகளான உத்துசான் மலேசியாவும் பெரித்தா ஹரியானும் செய்தி வெளியிட்டுள்ளன.
“கர்பால் இஸ்லாத்துக்கு எதிரானவர் என்ற என் அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் அவரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்,” என நசாருதின் கூறியதாகவும் அந்த ஏடுகள் குறிப்பிட்டன.
“இஸ்லாத்தின் ஒரு பகுதியை நிராகரிப்பது இஸ்லாத்தை நிராகரிப்பதாகும்,” என உத்துசானின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவுக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் syumul என்றும் அது சமயம், சட்டங்கள், தார்மீகப் பண்புகள் ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது என்றும் பாஸ் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது,” என்றும் நசாருதின் சொன்னார்.
தமக்கு எதிராக நசாருதின் விடுத்துள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து அந்த பாஸ் தலைவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலிப்பதாக கர்பால் கூறியுள்ளதற்கு நசாருதின் பதில் அளித்தார்.
நசாருதின் சறுக்கலான நிலையில்
13வது பொதுத் தேர்தலில் நசாருதின் நிறுத்தப்படக் கூடாது என பாச்சோக்கில் உள்ள பாஸ் ஆதரவாளர்கள் விரும்புவதாக கிளந்தான் பாஸ் ஆணையாளர் முகமட் அமார் நிக் அறிவித்துள்ளார்.
மெக்காவுக்கு சென்ற பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் நசாருதின் காணப்படும் படத்தை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் முதல் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து பாஸ் ஆதரவாளர்கள் நசாருதின் மீது ஆத்திரமடைந்துள்ளனர்.
இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கூட்டரசு அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் மலேசியாவில் அதனை அமலாக்க முடியாது என புக்கிட் குளுகோர் எம்பி-யுமான கர்பால் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
1988ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் மலேசியாவின் சட்டங்கள் சமயச் சார்பற்றவை என முன்னாள் தேசியத் தலைமை நீதிபதி சாலே அபாஸ் கூறியிருப்பதையும் கர்பால் சுட்டிக்காட்டினார்.
என்றாலும் கூட்டரசின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை டிஏபி ஏற்றுக் கொள்கிறது என்றும் அரசமைப்பில் சமய சுதந்திரத்துக்கு வகை செய்யப்பட்டுள்ளது என்றும் கர்பால் அடிக்கடி சொல்லி வருகிறார்.
ஹுடுட் சட்டம் எப்போதும் டிஏபி-க்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகின்றது. 2001ம் ஆண்டு எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாற்று பாரிசான் (Barisan Alternatif) கூட்டணியிலிருந்து இஸ்லாமிய நாடு விவகாரத்தின் மீது டிஏபி விலகிக் கொண்டது.
என்றாலும் புதிய பக்காத்தான் கூட்டணியின் கீழ் அந்த விவகாரம் மீது கருத்து வேறுபாடு இருப்பதை இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது.
மசீச ‘இஸ்லாத்துக்கு எதிரானதா’ ?
ஹுடுட் தொடர்பில் அந்த இரண்டு எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் நிலவும் கருத்து வேறுபாட்டை பெரிதாக்குவதற்கு பிஎன் கட்சிகள் முயலும் வேளையில் அம்னோவும் இந்த நாட்டில் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்குச் சாதகமாகக் குரல் கொடுத்து வருகின்றது.
முஸ்லிம்களுக்கு நியாயமாக நடந்து கொள்வதற்காக முஸ்லிம் அல்லாதாருக்கும் ஹுடுட் அமலாக்கப்பட வேண்டும் என ஜோகூர் அம்னோ எம்பி ஒருவர் கூட யோசனை கூறியிருக்கிறார்.
கடைசியாக யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட், நாடாளுமன்றத்தில் ஹுடுட் சட்டத்தை முன்மொழிவதில் அம்னோவுடன் இணைந்து கொள்ளுமாறு பாஸ் கட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதின் மூலம் ஹுடுட்-க்கு ஆதரவளித்துள்ளார்.
ஆனால் அந்தச் சட்டத்தை அமலாக்குவதை மசீச வெளிப்படையாக நிராகரித்து வந்துள்ளது. அது அமலாக்கப்பட்டால் பிஎன் கூட்டணியிலிருந்து விலகப் போவதாகவும் அது மருட்டியுள்ளது.
ஆனால் ஆதிக்கம் பெற்ற அந்த சீனர் கட்சி இது நாள் வரையில் ‘இஸ்லாத்துக்கு எதிரானது’ எனக் குற்றம் சாட்டப்படவே இல்லை.