கட்சி தாவலுக்கு எதிரானச் சட்டத்தை முன்மொழிய டிஎபி தயார்

டிஎபி கட்சி தாவலை எதிர்க்கிறது; அது வாக்காளர்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம் என்பதால் அதனை என்றுமே ஆதரித்ததில்லை என்று டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி அல்லது சம்பந்தப்பட்ட கட்சி மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படக்கூடாது ஏனெனில் அவர்களுக்கு அவ்வாறு செய்யும் உரிமை கிடையாது என்று கர்பால் கூறினார்.

கட்சி தாவும் உறுப்பினரை டிஎபி பொறுத்துக்கொள்ளாது என்பதோடு கட்சி தாவுவதற்கு திட்டமிட்டுள்ள எவரும் அதனை நியாயப்படுத்த அளிக்கும் எவ்வித காரணத்தையும் ஏற்றுகொள்ளாது என்று அவர் உறுதியளித்தார்.

கடந்த காலத்தில் கட்சி தாவலுக்கு எதிரானச் சட்டத்தை கிளந்தான் மாநில பாஸ் இயற்றியிருந்தது. ஆனால், அது சட்டத்திற்கு முரணானது என்று நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள கூட்டுசேரும் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறப்பட்டது.

அடுத்த பொதுத் தேர்தல் தூயமானதாகவும், கபட நோக்கமற்ற அல்லது மக்களுக்கு துரோகம் இழைக்காத வேட்பாளர்களைக் கொண்டதாகவும் இருக்கும் என்று நாம் நம்புகிறோம்”, என்று கெராக்கான் கட்சி தாவல் குறித்து பினாங்கு மாநில முதல்வர் குவான் எங்கின் நிலைப்பாடு என்ன என்று கேட்டிருந்ததற்கு மறுமொழியாக கர்பால் இன்று செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

கட்சி தாவல் “நெறிமுறைக்கு மாறானது” என்று வர்ணித்த மாநில கெராக்கான் சட்ட மற்றும் மனித உரிமை பிரிவின் தலைவர் பல்ஜிட் சிங், இவ்வாறு கட்சி தாவுதலை குவான் எங் ஆதரிக்கிறாரா என்பது குறித்த அவரின் நிலைப்பாட்டை இன்னும் கூறவில்லை என்றார்.

பிகேஆர் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் பல பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கத்தான் ரக்யாட்டிற்கு செப்டெம்பர் 16 இல் தாவுவார்கள் என்று இரு ஆண்டுகளுக்கு முன்பு கூறியபோது, முதலமைச்சர் குவான் எங் மௌனமாக இருந்ததற்காக அவரை பல்ஜிட் குறைகூறினார்.

ஆனால், கெராக்கானின் பிஎன் கூட்டணி இதுபோன்ற கட்சிமாறிகளால் பெரும் நன்மை அடைந்துள்ளது. மூன்று பக்கத்தான் மாநில பிரதிநிதிகள் கட்சி மாறியதால் ஆளும் கூட்டணி 2009 ஆண்டில் பேராக்கில் ஆட்சியைக் கைப்பற்றியது.

சட்டத் திருத்தத்திற்கு பரிந்துரை

பக்கத்தான் மத்தியில் ஆட்சி அமைத்தால் கட்சி தாவுதலுக்கு எதிரான சட்டத்தை முன்மொழிய டிஎபி ஒப்புக்கொண்டுள்ளது என்று கர்பால் கூறினார்.

“சில பிரதிநிதிகள் அவர்களுடையக் கட்சியை விட்டு விலகியபோதும் தற்போதைய சட்டத்தை ஒரு சாக்காக பயன்படுத்தி பதவி விலக மறுக்கின்றனர்”, என்று அவர் மேலும் கூறினார்.

“இதற்கு ஒப்புதல் அளிப்பதற்கு பாஸ் கட்சிக்கு எவ்விதப் பிரச்னையும் இருக்காது ஏனென்றால் இது போன்ற சட்டத்தை அவர்களுடைய மாநில சட்டமன்றத்தில் அவர்கள் இயற்றியுள்ளனர்.

“இதனை பிகேஆர் தலைமையத்துவம் ஏற்றுக்கொள்வதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். எனினும், கட்சித் தாவலை பகிரங்கமாக ஆதரிக்கும் தைரியம் எவருக்கும் இல்லை”, என்றாரவர்.

TAGS: