ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு: குற்றத்தை மெய்பிப்பது அரசாங்கத்தைச் சார்ந்தது

 “சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் விளக்கம் அவசியமே இல்லை. அந்தத் திருத்தம் உண்மையில் நீதியை மிதிக்கிறது. அதை விட விளக்கம் தேவை இல்லை.”

ஹிஷாம்: ஆதாரச் சட்டத் திருத்தங்களை ஏஜி (சட்டத்துறைத் தலைவர்) விளக்குவார்

பெர்ட் தான்: ஆதாரச் சட்டத்தைப் பயன்படுத்தி பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைச் சிக்க வைக்க இதோ வந்து விட்டது போலீஸ் 101.

இணையத் தள உரிமையாளர் உறங்கும் நேரத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் தேசத் துரோகக் கருத்துக்களை அதிகாலை 3 மணிக்கு அந்தத் தளத்துக்குள் சேர்த்து விடுவார். அதிகாலை 4 மணிக்கு பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரத்துடன் உங்கள் வீட்டுக் கதவுக்கு அருகில் காலை 6 மணிக்குப் போலீஸ் நிற்கும்.

‘சரியான சிந்தனையைக் கொண்ட’ பயனாளிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் வாக்குறுதி கொடுக்கும் போதே கவலைப்பட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. நாம் அனைவருமே தேசத் துரோகத்திற்காக கைது செய்யப்பட முடியும். சட்டத்துறைத் தலைவர் முடிவு செய்தாலும் அமலாக்க அதிகாரிகள் விரும்பினாலும் அதனைச் செய்து விடலாம். 

ஒடின்: சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லின் விளக்கம் அவசியமே இல்லை. அந்தத் திருத்தம் உண்மையில் நீதியை மிதிக்கிறது. அதை விட விளக்கம் தேவை இல்லை. அந்தத் திருத்தம் அவசரம் அவசரமாகத் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். அதனை ரத்துச் செய்யுங்கள்.

கேகன்: உங்கள் பெயருடன் ஒரு கட்டுரை இணையத்தில் காணப்பட்டு அதன் எழுத்தர் நீங்கள் எனக் காட்டும் படமும் இருந்தால் நீங்கள் வேறு விதமாக நிரூபித்தால் தவிர நீங்கள் தான் அதனை எழுதியவர் எனக் கருதப்படுவீர்கள். நாம் அதனை சோதனை செய்ய வேண்டும்.

ஹிஷாமுடினை எழுத்தராகக் கொண்டு அரச குடும்பதைக் குறை கூறும் ஒரு கட்டுரை இணையத்தில் வருவதாக வைத்துக் கொள்வோம். தாம் அதனை எழுதியவர் அல்ல என்பதை அவர் மெய்பிக்கட்டும்.

தெக்கி: ஹிஷாமுடினே ஒரு வழக்குரைஞர். ஆனால் அந்த ஆதாரச் சட்டத் திருத்ததை விளக்க முடியவில்லை!

உண்மையில் ‘விளக்கம்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘நியாயப்படுத்துவது’ என்னும் சொல்லைச் சேர்க்க வேண்டும். ஹிஷாம் மோசமான அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தும் ஆபத்தான வேலையிலிருந்து தப்பித்துக் கொண்டு அந்தச் சுமையை சட்டத்துறைத் தலைவருக்கு தள்ளி விட்டுள்ளார்.

நம்பாதவன்: மோசமான சட்டங்கள் என்பது மட்டும் எங்கள் கவலை இல்லை. அரசாங்கம் தேர்வு செய்து அந்தச் சட்டங்களை பயன்படுத்தும் என்பதே எங்கள் கவலையாகும்.

பெர்க்காசாவின் இப்ராஹிம் அலி, ஜாத்தியின் ஹசான் அலி போன்றோர் பிடிக்கப்படுவதில்லை. ஆனால் டிஏபி-யின் கர்பால் சிங், மலேசியாகினியின் கேலிச் சித்திர ஒவியர் ஸுனார் ஆகியோரை அதிகாரிகள் தொடருகின்றனர்.

சிஎன் யீ: சட்டம் என்பது அதில் கூறப்பட்டுள்ளது அல்ல என ஹிஷாமுடின் சொல்ல வருகிறாரா? ஆகவே அதற்கு விளக்கம் தேவை என அவர் கருதுகிறாரா?

ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவு என்ன சொல்கிறது என்பதை அது கூறப்பட்டுள்ள நிலையில் வழக்குரைஞர் மன்றமும் மற்ற சட்ட வல்லுநர்களும் விளக்கமளித்துள்ளனர். ஏஜி ‘வேறு’ எந்த வகையில் அதனை விளக்கப் போகிறார்?

பூம் பூம் பாவ்!: நான் சந்தித்த மலாய் தொழில் முனைவர் ஒருவர் ஹிஷாமுடினுடன் உரையாடும் வாய்ப்புத் தமக்குக் கிடைத்ததாகச் சொன்னார். அமைச்சராக உள்ள ஒருவருக்கு தேவைப்படும் சிந்தனை ஆற்றல்  ஹிஷாமுடினிடம் இல்லை என அவர் வருணித்தார்.

இதனைப் பகிர்ந்து கொள்வதற்காக நான் கைது செய்யப்படுவேனா?

 

TAGS: