எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தங்கள் ஏற்பாடுகள் பற்றி கருத்துக் கூறுவதை பிகேஆர் தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.
அவர்கள் கேள்விகள் தொடுக்கப்பட்டால் மௌனமாக இருக்க விரும்புகின்றனர் அல்லது ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றனர்.
இவ்வாண்டு நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு திட்டமிடுவதில் எதிரிகள் தங்களை மிஞ்சி விடாமல் தடுப்பதே அவர்களுடைய நோக்கம் எனத் தெரிய வருகின்றது.
தேர்தல் அல்லது சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பற்றி தகவல்களை வெளியிடுவதில்லை என பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவம் இணக்கம் கண்டுள்ளதாக நேற்று பிகேஆர் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
வேட்பாளர் பட்டியல் மீது தலைமைத்துவம் இன்னும் வேலை செய்து வருவதாக குறிப்பிட்ட முன்னாள் துணைப் பிரதமருமான அன்வார், குறிப்பிட்ட சில வேட்பாளர்களை அங்கீகரிப்பதற்கு என்ன பிரச்னைகள் தடையாக இருக்கின்றன என்பதை விவரிக்க மறுத்து விட்டார்.
வேட்பாளர் நியமன நாளன்று பட்டியல் வெளியிடப்படுமா என வினவப்பட்ட போது ‘முன் கூட்டியும் இருக்கலாம்,” என அன்வார் பட்டும் படாமலும் பதில் சொன்னார்
தமது பெர்மாத்தாங் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அவர் அங்கு மீண்டும் போட்டியிடுவாரா எனவும் அன்வாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘அது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ‘ என உறுதியாகப் பதில் அளித்தார்.
தாக்கப்பட்டாலும் வெற்றி கிடைக்கும்
எதிர்வரும் தேர்தலுக்கான தேதி குறித்து ஆரூடம் கூறுமாறு அன்வாரிடம் கேட்கப்பட்ட போது அவர்,” கோலாலம்பூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் நஜிப் ரசாக் நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்குச் சென்ற பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிடம் அந்தக் கேள்வியைத் தொடுக்க வேண்டும்,” என நிருபர்களிடம் வேடிக்கையாகக் கூறினார்.
அந்த விவகாரம் மீது எந்த அறிக்கைகளை வெளியிட அங்கிருந்த லிம் மறுத்து விட்டார். குவார் பெராஹுவில் நடந்த அன்வார் திறந்த இல்ல உபசரிப்பில் லிம், தமது மனைவி பெட்டி சியூ, இளைய புதல்வர் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
இவ்வாண்டு இறுதிக்கு முன்னதாக நஜிப் தேர்தலை நடத்தினால் பக்காத்தான் மாநிலங்கள் தங்கள் சட்டமன்றங்களைக் கலைப்பதைத் தாமதப்படுத்தும் சாத்தியம் உண்டா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அன்வார், “நாங்கள் அனைவரும் களைப்படைந்து விட்டோம்,” என்றார்.
“என்றாலும் நாங்கள் தேர்தலுக்காக தொடர்ந்து வேலை செய்வோம்,” என அவர் சொன்னார்.
அவ்வப்போது மழை பெய்த போதிலும் நண்பகல் மணி 12 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற
அந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு வந்த பல இன ஆதரவாளர்களுடன் அன்வார் கைகுலுக்கினார். 2008ம் ஆண்டு பினாங்கில் 29 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றி பக்காத்தான் மாநில அரசாங்கத்தை அமைத்த வெற்றி மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், “பினாங்கு ஒரு வெற்றிக் கதை” எனச் சொன்னார்.
“முதலமைச்சர் மீது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய போதிலும் அந்த வெற்றி கிடைக்கும் . அவர் பினாங்கிற்கு என்ன செய்துள்ளார் என்பது பொது மக்களுக்கு நன்கு தெரியும்,” என அன்வார், பினாங்கு துணை முதலமைச்சரும் மாநில பிகேஆர் தலைவருமான மான்சோர் ஒஸ்மானுடன் கூட்டாக நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் கூறினார்.
அம்னோ 15 இடங்களையும் கெரக்கான், மசீச எட்டு இடங்களையும் வெல்லும் என பிஎன் தெரிவித்துள்ள நம்பிக்கை பற்றிக் குறிப்பிட்ட அவர், அது ‘பிஎன் தகவல்,” என்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
அந்தத் திறந்த இல்ல உப்சரிப்பில் அந்நியச் சுற்றுப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பக்காத்தான் தலைவர்கள் வண்ண வண்ண பாத்தேக் சட்டையிலும் மலாய் உடையிலும் காணப்பட்டனர்.
பினாங்கு கவர்னர் அப்துல் ரஹ்மான் அபாஸ், தமது துணைவியாருடன் மாலை 4 மணிக்கு அந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் உட்பட அன்வார் குழுவில் சிறப்பு விருந்தினர் ஒருவரும் காணப்பட்டார். ஒய்வு பெற்ற இராணுவத் தலைமைத் தளபதி ஹஷிம் ஹுசேனே அவர் ஆவார். அவர் பிகேஆர்-கட்சிக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்ட அன்வார் எல்லோரிடமும் மிகவும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார்.
பல இந்திய ஆதரவாளர்கள் அன்வாருக்கு மாலை அணிவித்ததுடன் அவருக்கு ஆதரவு காட்டும் வகையில் அவருடன் படமும் எடுத்துக் கொண்டனர்.
அண்மையில் பிகேஆர் கட்சியில் இணைந்த முன்னாள் மக்கள் சக்தி, ஹிண்ட்ராப் தலைவர்கள் எனத் தங்களைக் கூறிக் கொண்ட ஒரு குழுவினர் தங்கள் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுமாறு பெனாந்தி சட்டமன்ற உறுப்பினருமான மான்சோரை கேட்டுக் கொண்டனர்.
“நாடு முழுவதும் பிகேஆர் கட்சிக்கு ஆதரவாக இந்தியர்களை திருப்புவதற்கு உதவி செய்ய நாங்கள் விரும்புகிறோம்,” என முன்னாள் ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத் தலைவரான எஸ்வி வேலன் மலேசியாகினியிடம் கூறினார்.