ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருடன் எழுந்துள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது பாஸ் சகாக்களுடன் பேச்சு நடத்த மாட்டார்.
அந்த மூத்த வழக்குரைஞரை ‘இஸ்லாத்துக்கு எதிரானவர்’ என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா வருணித்ததைத் தொடர்ந்து அவருடன் அண்மைய வாரங்களாக கர்பால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் எனக் கூறப்படுவதை வன்மையாக மறுத்துள்ள கர்பால் அந்த பாச்சோக் எம்பி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மருட்டியுள்ளார்.
கர்பால் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதனைத் தாம் வரவேற்பதாக நசாருதின் சொன்னார் என அம்னோ ஆதரவு நாளேடுகள் செய்தி வெளியிட்டன.
இவ்வாண்டு நிகழும் என எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலில் தான் ஆட்சிக்கு வந்தால் ஹுடுட்டை அமலாக்கப் போவதாக பாஸ் வலியுறுத்துவது மீது அதன் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடல் நடத்த வேண்டிய அவசியமில்லை எனக் கர்பால் குறிப்பிட்டார்.
நசாருதினுடன் தமக்கு எழுந்துள்ள பிரச்னை நான்கு ஆண்டு காலப் பக்காத்தான் ராக்யாட்டில் பிளவை ஏற்படுத்துமா என வினவப்பட்ட போது, இஸ்லாத்தை இழிவுபடுத்தும் எதனையும் சொல்லவில்லை என கர்பால் வலியுறுத்தினார்.
“அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு இந்த நாட்டின் அதிகாரத்துவ சமயமாக இஸ்லாத்தை நானும் டிஏபி-யும் ஏற்றுக் கொள்கிறோம்.”
அவர் நேற்று பினாங்கு ஆயர் ஹீத்தாமில் நிருபர்களிடம் பேசிய போது தமது நிலையை மீண்டும் எடுத்துரைத்தார்.
“ஆனால் நாங்கள் இஸ்லாமிய நாட்டை ஏற்கவில்லை. காரணம் அரசமைப்பில் அது பற்றிக் கூறப்படவே இல்லை,” என அவர் மேலும் சொன்னார்.
“நசாருதின்தான் மெக்காவிலிருந்து திரும்பிய பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கினார்,” என புனித நிலத்துக்கு அந்த பாஸ் தலைவர் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய பயணம் பற்றிக் குறிப்பிட்டார்.
மெக்காவில் நசாருதின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் காணப்பட்ட படத்தை அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா வெளியிட்ட பின்னர் நசாருதின் மீது பாஸ் கட்சியில் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.