ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை பாஸ் இழக்கச் செய்து விடும் என பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
அந்த டிஏபி தலைவருடைய கருத்துக்கள், மலேசிய மலாய்க்காரர்களை அந்தக் கட்சி ஆதரிக்கவில்லை என்ற தோற்றத்தை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது என அவர் சொன்னதாக மலாய் நாளேடான பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அதனை உணர்வுப்பூர்வமாக பார்த்தால் டிஏபி வெற்றி பெறுவதற்கு மலாய் வாக்குகள் அவசியமில்லை என கர்பால் நம்புவதாக தோன்றுகிறது. டிஏபி அந்த அபாயத்தை எதிர்கொள்வது நியாயமா இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால் அது நிச்சயம் அதன் தோழமைக் கட்சியான பாஸ் கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பாதிக்கும்,” என அவர் கூறினார்.
ஹுடுட் மீது கர்பால் தெரிவித்துள்ள முந்திய கருத்துக்களும் பக்காத்தான் ராக்யாட்டின் நிலைக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளன என்றும் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்டின் புதல்வருமான நிக் முகமட் சொன்னார்.
கர்பாலுடைய ஹுடுட் எதிர்ப்பு கருத்துக்கள் பற்றி பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசானும் கருத்துரைத்துள்ளார். குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அந்தச் சட்டத்துக்கு உள்ள ஆற்றலை அவர் சிறுமைப்படுத்தியதின் மூலம் வரம்பு மீறிச் சென்றுள்ளதாக அவர் சொன்னார்.
ஹுடுட் மீதான கர்பால் அணுகுமுறை ‘முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தை மூட்டும்’ என அவர் கருதுகிறார்.
“ஹுடுட்டை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் முஸ்லிம் உணர்வுகளை மதிக்குமாறும் பக்காத்தான் கட்சிகளுக்கு இடையில் நல்ல உறவுகளைப் பாதுகாக்குமாறும் டிஏபி, கர்பாலுக்கு அறிவுரை கூற வேண்டுமென நான் விரும்புகிறேன்.”
ஹுடுட்-டை கொண்டு வருவதை குறை கூறுவதை கர்பால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் கெடா முப்தி முகமட் பாடெருதின் அகமட் கேட்டுக் கொண்டுள்ளார்.
கர்பாலுடைய ஆட்சேபங்கள் முஸ்லிம்களை அவமரியாதைப்படுத்துவதாக காட்டப்படுகின்றன என்ற நஸ்ருதினுடைய கருத்துக்களை அவரும் ஒப்புக் கொண்டார்.
“பல தரப்புக்களிடைய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால் கர்பால் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என அவர் சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
“அந்த வகையில் அவர் எல்லா சமயங்களின் குறிப்பாக மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் என்பதால் இஸ்லாத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.”