போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெர்சே 250 ஆயிரம் ரிங்கிட் திரட்டுகிறது

பெர்சே என அழைக்கப்படும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி ‘1 ரிங்கிட்-டுடன் மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்னும் தனது இயக்கத்திற்குப் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளைக் கோரியுள்ளது.

ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடைய மருத்துவ, சட்ட செலவுகளுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்படும்.

போலீஸ் முரட்டுத்தனத்தால் பாதிக்கப்பட்டு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளவர்களுக்கும் அவர்களுடைய மருத்துவச் செலவுகளுக்கும் அந்த நிதியிலிருந்து உதவி செய்யப்படும் என பெர்சே நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

மொத்தம் 250,000 ரிங்கிட் திரட்டுவது தனது குறிக்கோள் என பெர்சே தெரிவித்தது. அதில் 150,000 ரிங்கிட் ஜாமீனுக்கும் சட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் எஞ்சியுள்ள 100,000 ரிங்கிட் பெர்சேயின் விழிப்புணர்வு தொடர்பு இயக்கங்களுக்கும் செலவு செய்யப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

பல வழக்குகளில் இலவசமாக வாதாடுவதற்கு வழக்குரைஞர்கள் குழு ஒன்று முன் வந்துள்ளது.

பேரணியின் போது ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறிக் கொள்ளும் சேதங்களுக்காக பெர்சே வழி காட்டல் குழுவின் பத்து உறுப்பினர்கள் மீது 122,000 ரிங்கிட் இழப்பீட்டுக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“அமைதியாக ஒன்று கூடும் சட்டம் அமைதியாக கூட்டங்களை நடத்துவதற்கு வகை செய்துள்ள புரட்சிகரமான சட்டம் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அந்தச் சட்டத்தின் பிரிவு 6(2)(ஜி)யை பெர்சே மீறியுள்ளதால் அரசாங்கம் பொதுச் சேதங்களுக்கான இழப்பீடுகளைக் கோரியுள்ளது,” என பெர்சே அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிட்டது.

அத்துடன் அதே பேரணியின் போது ஏற்பட்ட சேதங்களுக்காக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவும் 351,203.45 ரிங்கிட் இழப்பீடு கொடுக்க வேண்டும் என கோலாலம்பூர் மாநகராட்சி மன்றமும் ஆணையிட்டுள்ளது.

பெர்சே மற்றொரு இயக்கத்தைத் தொடங்கும்

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் சீர்திருத்தம் மீதான விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்துவதற்கும் அந்தப் பணத்தில் பாதி செலவு செய்யப்படும் என்றும் பெர்சே அறிவித்தது.

துண்டுப் பிரசுரங்களைத் தயாரிப்பது, கேலிச் சித்திர வீடியோக்களை தயாரிப்பது, ‘பெர்சே டிவி’-யை அமைப்பது, பெர்சே-யின் எட்டுக் கோரிக்கைகள் மீது கருத்தரங்குகளை நடத்துவது, தேர்தலில் வாக்களிக்குமாறு இளைஞர்களை ஊக்குவிப்பது ஆகிய நடவடிக்கைகள் அந்த இயக்கத்தில் அடங்கும்.

“உங்கள் ஆதரவுடன்  ‘Keluar Mengundi Lawan Penipuan’ என்ற முக்கியச் செய்தி நாடு முழுவதும் பரப்பப்படும். அவசியமான மாற்றங்களை அதிகாரிகள் அமலாக்குவதற்கு அது நெருக்குதல் கொடுக்கும். அதே வேளையில் விவேகமாக வாக்களிக்குமாறு வாக்காளருக்கும் அறிவுறுத்தப்படும்.”

பெர்சே 1 ரிங்கிட் இயக்கத்துக்கான நன்கொடைகளை பின் வரும் அதன் CIMB வங்கிக் கணக்கு மூலம் அனுப்பலாம்: ‘Persatuan Kesedaran Komuniti Selangor’, account no 12380000661-10-0.

“திரட்டப்படும் நிதிகள் பற்றி எங்கள் இணையத் தளத்தில் அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளையும் அங்கு காணலாம்,” என்றும் பெர்சே கூறியது.

“அடுத்த பொதுத் தேர்தல் நெருங்குவதால் பெர்சே 2.0 உங்கள் ஆதரவை நாடுகிறது. பணிகள் தொடர வேண்டும். நாம் அனைவரும் தொடர்ந்து முன்னேற ஒன்றாக உழைப்பதும் அவசியமாகும்.”

 

TAGS: