பினாங்கின் ‘கட்சித் தாவல் தடுப்பு’ சட்டத்தை நஸ்ரி சாடியிருக்கிறார்

பினாங்கு மாநில அரசாங்கம் யோசனை தெரிவித்துள்ள ‘கட்சித் தாவல் தடுப்பு’ சட்டத்தை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் நிராகரித்துள்ளார்.

கூட்டரசு அரசமைப்பு வழங்கியுள்ள கூட்டு சேருவதற்கான சுதந்திரத்தை அது மீறுவதாக அவர் சொன்னார்.

எந்த ஒரு கட்சியுடனும் தங்களைப் பிணைத்துக் கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என அவர் கருதுகிறார்.

“ஆகவே நாம் அரசமைப்பை திருத்தாத வரையில் அந்த ‘கட்சித் தாவல் தடுப்பு’ சட்டம் எந்த முன்னேற்றமும் காணும் என நான் எதிர்பார்க்கவில்லை. அதே விஷயம் சபாவில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.”

“டிஏபி-யைப் பொறுத்த வரையில் எனக்குப் புரியாத விஷயம் இது தான். அரசமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் சுதந்திரம் பற்றி பேசும் எம்பி-க்கள் அதனிடம் உள்ளனர்.”

“அதே நேரத்தில் அவர்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதற்கு மாறான காரியங்களைச் செய்கின்றனர்,” என அவர் சொன்னதாக ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விஷயத்தில் பிஎன் ‘விவேகமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும்’ நடந்து கொள்வதாக சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சருமான நஸ்ரி சொன்னார். ஆளும் கூட்டணி கட்சி மாறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் எதிர்க்கட்சியிலிருந்து வருவதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதே அதற்குக் காரணமாகும் என்றார் அவர்.

“அவற்றைப் போல் அல்லாமல் பிஎன்  விவேகமாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் செயல்படுகின்றது. மற்ற தரப்புக்கள் வேண்டாத உறுப்பினர்களையே நீங்கள் பெற்றுள்ளீர்கள். நாங்கள் அவர்களை எங்கள் கட்சிக்குள் (இந்தத் தவணையில்) ஏற்றுக் கொள்வதில்லை.”

“நீங்கள் கொள்கைப் பிடிப்புள்ள கட்சியாக இருந்தால் மற்ற கட்சிகளின் உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்கள் செய்த முடிவை நீங்கள் மதிக்க வேண்டும். எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் அவர்களை எடுத்துக் கொள்வதில்லை. அவர்கள் சுயேச்சைகளாக இருக்கின்றனர்.”

“பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள பெரும்பாலான எம்பி-க்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதே தெரியவில்லை. அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர்,” என்றார் நஸ்ரி.

கட்சி விலகியவர்கள் பிஎன் -னில் சேரவில்லை

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தானிலிருந்து விலகிய தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் அனைவரும் ஆளும் கூட்டணியில் சேரவில்லை. தாங்கள் பிஎன் நட்புறவுப் பேராளர்கள் என்று மட்டும் அவர்கள் அறிவித்துக் கொண்டனர். அவ்வாறு செய்தவர்களில் 2009ம் ஆண்டு பேராக் மாநில அரசாங்கத்தை பிஎன் மீண்டும் கைப்பற்றுவதற்கு உதவிய மூன்று பேராக் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

கடந்த மாதம் சபா பிஎன் -னைச் சேர்ந்த இரண்டு எம்பி-க்கள்- பியூபோர்ட்டின் லாஜிம் உக்கின், துவாரானின் வில்பிரெட் பூம்புரிங் ஆகிய இருவரும் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்கும் புதிய அரசியல் அமைப்புக்களை தோற்றுவித்தனர்.

பாதித் தவணைக் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுக்கும் பொருட்டு தனது நவம்பர் மாதக் கூட்டத்தில் சட்டமியற்ற பினாங்குச் சட்டமன்றம் எண்ணியுள்ளதாக முதலமைச்சர்  லிம் குவான் எங் செவ்வாய்க் கிழமை அறிவித்தார்.

1992ம் ஆண்டு அத்தகைய சட்டம் அரசமைப்புக்கு முரணானது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளதால் அந்த அறிவிப்பு வெறும் பிரச்சாரத் தந்திரம் என பலர் குறை கூறியுள்ளனர்.

என்றாலும் முந்திய நீதிமன்ற முடிவுகளை மறு செய்யுமாறு கூட்டரசு நீதிமன்றம் வரையில் அந்த விவகாரத்தை மாநில அரசாங்கம் கொண்டு செல்ல முடியும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறிக் கொண்டுள்ளார்.

 

TAGS: