பினாங்கு அரசு கட்சித்தாவல்-தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்திருப்பதை அடுத்து சிலாங்கூரும் அதுபோன்ற சட்டமொன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பினாங்கின் அடிச்சுவட்டை சிலாங்கூர் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங்.
“ஒரு துடிப்பான ஜனநாயகம் தேர்தலின்போது தங்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்களின் விருப்பத்தை உதாசீனப்படுத்தக்கூடாது.
“மக்கள் யாருக்கு எதிராக வாக்களித்து ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக அப்பிரதிநிதி மாறும்போது மக்களிடம் ஏற்படும் தாக்கத்தின்மீது சட்டம் கவனம் செலுத்த வேண்டும்.
“அது மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் துரோகம் மட்டுமல்ல தார்மீக குற்றமுமாகும்”, என்று கோபிந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார்.
யாருடனும் சேர்வதற்குக் கூட்டரசு அரசமைப்பு உரிமை வழங்குவதை மதிக்க வேண்டும் என்றாலும்கூட மக்கள் தங்களின் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்திச் செய்யும் தேர்வுக்குக் கூடுதல் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
“இல்லையேல் ஜனநாயக தேர்தலுக்கு அர்த்தமின்றிப் போய்விடும்”, என்றாரவர்.
தவற்றைச் சரிசெய்ய வேண்டும்
அப்படிப்பட்ட சட்டம் அரசமைப்பின் 10ஆம் பகுதிக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதை எண்ணி பக்காத்தான் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்று தம் தந்தையாரும் டிஏபி தேசிய தலைவருமான கர்பால் சிங் கூறியுள்ள கருத்தையே கோபிந்தும் எதிரொலித்தார்.
“ஒன்று சரியில்லை என்றால் அதைத் திருத்த வேண்டும். சட்டத்தை உருவாக்குவதன் மூலமாகவோ சட்டத்தை மறு ஆய்வு செய்வதன்வழியோ அதைச் செய்யலாம்”.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்(ஐஎஸ்ஏ) இரத்துச் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய கோபிந்த் இவ்விவகாரத்திலும் கூட்டரசு நிலையிலும் மாநில அளவிலும் “சரிசெய்ய” ஏதாவது செய்ய முடியும் என்றார்.
“டிஏபி கட்சித்தாவலை எதிர்ப்பதைத் தெளிவாகவே வலியுறுத்தியுள்ளது. இனி, தேவையான மாற்றங்களைச் செய்வது பிஎன் கைகளில்தான் உள்ளது. எங்களின் ஆதரவுடன் அரசமைப்பில் திருத்தங்கள் கொண்டுவர முடியும்”, என்றாரவர்.
1991-இல், பாஸ் தலைமையிலான கிளந்தான் அரசு, கட்சி உறுப்பியத்தை இழக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழப்பார்கள் என்று மாநில அரசமைப்பில் திருத்தம் கொண்டு வந்தது.
அத்திருத்தத்துக்கு எதிராக வழக்கு கொண்டுவரப்பட்டதில், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அத்திருத்தம் கூட்டரசு அரசமைப்பு பகுதி 10 (1)(சி)க்கு முரணானது என்பதால் செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பு கூறியது.
அத்தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவாலும் நிலைநிறுத்தப்பட்டது.
அண்மையில் அவ்விவகாரத்தை மறுபடியும் கிளப்பிய பினாங் முதலமைச்சர் லிம் குவான் எங், பினாங்கு சட்டமன்றம் அதன் நவம்பர் மாத அமர்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிதாவுவதற்கு எதிரான சட்டம் கொண்டுவரப்போவதாக அறிவித்தார்.
நேற்று அம்முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அதை ஒரு விளம்பர வித்தை என்று சாடினார்.