மகாதிர்: “மக்களால் அறியப்பட்ட பிசாசுகள் நாங்களே”

அண்மையில் தம் வலைப்பதிவில் இட்டிருந்த ஒரு இடுகை பற்றி விளக்கமளித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அதில் ஆளும் கட்சியைத்தான் “பிசாசு” என்று குறிப்பிட்டதாகக் கூறினார்.

“அதில் பிசாசு என்றது யாரை என்று கேட்கிறார்கள்.நாங்களே மக்கள் அறிந்த பிசாசுகள்.தேவதைகள் என்றது அவர்களை.அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை மக்கள் அறிய மாட்டார்கள்”, என்றாரவர். மகாதிர் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பின்போது செய்தியாளர் கூட்டமொன்றையும் நடத்தினார்.

“அவர்கள்” என்றால் யார் என்று வினவியதற்கு, “மாற்றரசுக் கட்சியினர்தான்” என்றார்.

அந்தத் “தேவதைகள்” அப்பாவிகள் அல்ல எனக் கூறிய மகாதிர் “சில நேரங்களில் தேவதைகளும் நிறைய குற்றம் செய்வதுண்டு” என்று எச்சரித்தார்.

மாற்றரசுக்கட்சியினர் மாற்றம் தேவை என்று கூறி வந்தாலும் மாற்றம் ஏற்படுவதால் நல்லது நடக்கும் என்பதற்கில்லை என்றார்.

“55ஆண்டுக்காலம் பிஎன் ஆண்டு விட்டது.மாற்றத்துக்கான தருணம் வந்துவிட்டது என்கிறார்கள்.

“ஆனால், மாற்றம் நல்லதுக்காக நடைபெற வேண்டும்.மாற்றத்தால் இன்னும் மோசமான ஒன்று வந்து வாய்க்குமானால் அதனால் வருத்தப்பட வேண்டியிருக்கும்.

“ஒன்று மட்டும் உறுதியாக சொல்வேன்.அவர்கள் ஒருவேளை வென்றால் என்றென்றும் தாங்கள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள முனைவார்கள்”, என்றாரவர்.

மகாதிர், கடந்த புதன்கிழமை தம் வலைப்பதிவில் “அறியப்படாத தேவதையைவிட அறிந்த பிசாசே மேலானது”, என்று குறிப்பிட்டு, அதனால் மக்கள் ஆளும் கட்சியையே ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார்.

TAGS: