குற்றச்செயல்களை எதிர்க்க முடியாத உள்துறை அமைச்சர் பதவி விலகுவதே நல்லது

-Jeyaseelen Anthony

போலீசைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவில் குற்ற விகிதம் பற்றித் தகவல்களைக் கசிய விட்டிருக்கிறார்.

 CPI Asia வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது மிகவும் சரியே.

என்கேஆர்ஏ குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாக பெருமை பேசினாலும் பெரும்பாலான மக்கள் கொள்ளைச் சம்பவங்களையும் வழிப்பறிகளையும் போலீசில் புகார் செய்வதில்லை என்பதுதான் உண்மை.புகார் செய்வதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்று நினைப்பதால் அவர்கள் பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

புகார் செய்யப்படாத குற்றச்செயல்கள் கணக்கில் சேரமாட்டா.அதனால்தான் குற்ற விகிதம் குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.அதிகாரிகளும் அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யப் போனால் போலீஸ் அதை அக்கறையுடன் காதுகொடுத்துக் கேட்பதில்லை.அப்படிப்பட்ட குற்றச்செயல்கள் நடப்பது மிகவும் இயல்பானது என்பதுபோல நடந்துகொள்வதாக பலரும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

உங்களில் பலருக்கும் அப்படிப்பட்ட அனுபவம் நேர்ந்திருக்கலாம்.

குற்றச்செயல்களைப் பொறுத்தவரை மலேசியாவில் யார் வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம்போல் தெரிகிறது.

ஆப்ரிக்கர்கள் இங்கு வந்து ஏமாற்றுதல், போதைப் பொருள் கடத்தல் முதலியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

அவர்களுடன் ஈரானியர்களும் தென்அமெரிக்கர்களும் சேர்ந்துகொண்டு ஆட்டம் போடுகிறார்கள்.ஒவ்வொரு நாளும் அவை பற்றிய செய்திகளைப் படிக்கிறோம்.

இதற்கெதிராக உள்துறை அமைச்சர் இதுவரை என்ன செய்திருக்கிறார்.குற்றச்செயல்களைச் செய்வதற்காகவே ஆப்ரிக்க  மாணவர்கள் வருகிறார்கள்.அரசாங்கமும் மலேசியாவைக் கல்வி மையம் ஆக்கும் நோக்கில் அவர்களுக்கு வரவேற்பு கொடுக்கிறது.

இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சின்கீழ் உள்ள குடிநுழைவுத் துறை கடுமையாக நடந்துகொள்ளாதிருப்பது ஏன்?

பிரிட்டன், அமெரிக்கா ஏன் இந்தியாவும்கூட நாடுகடந்து நடக்கும் குற்றச்செயல்களையும் பயங்கவரவாதத்தையும் கருத்தில்கொண்டு குடிநுழைவு விவகாரங்களில் கடுமையாக நடந்துகொள்கின்றன.ஆனால், நம் உள்துறை அமைச்சர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இன்னும் மோசமான விசயம் என்னவென்றால், இந்த அந்நிய குற்றவாளிகளை மலேசிய சிறைகளில் வைத்து அவர்களுக்கு உணவளிக்க மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது.

அந்நியக் குற்றவாளிகளை விட்டு உள்ளூர் குற்றவாளிகளைப் பார்ப்போம்.இவர்கள் பெரும்பாலும் குறைந்த விலை வீடமைப்புப் பகுதிகளிலிருந்து வருவதாகத் தெரிவதால் அந்தப் பக்கத்தில் போலீசார் உளவு வேலைகளை முடுக்கிவிடுவது நலமாக இருக்கும்.

உண்மை அறிந்தே சொல்கிறேன்.நம்புங்கள். ஏனென்றால் என் மனைவியிடமும் வழிப்பறி நடந்துள்ளது.வழிப்பறிச் செய்தவர்கள் அருகில் உள்ள அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள்.

என் வசிப்பிடத்துக்கு அருகில் குறைந்த விலை வீடு அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டதும் குற்றச் செயல்கள் பெருகி விட்டன.

சில போலீஸ் அதிகாரிகள்கூட இதைக் கூறியிருக்கிறார்கள்.

போலீஸ் சிறப்புப் பிரிவினரை அரசியல் ஆர்வலர்களை வேவு பார்க்கப் பயன்படுத்தாமல் இப்படிப்பட்ட பகுதிகளில் பணியாற்ற அனுப்பி வைக்க வேண்டும்.

கறுப்புப் பகுதிகளில் ஆள்களை நிறுத்திவைத்து உளவுத்தகவல்கள் சேகரித்து அதன்வழிதானே கம்முனிஸ்டுகளைச் சிறப்புப் பிரிவு தோற்கடித்தது.

இப்போது ஏன் அதைச் செய்யவில்லை.செய்தால் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடலாமே.

எனவே, கடும் போக்கைக் கடைப்பிடிக்கும் தருணம் வந்துவிட்டது.உள்துறை அமைச்சர் அவர்களே, தயாராகுங்கள்.உங்களால்  முடியவில்லை என்றால் செய்து முடிக்கக்கூடியவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பதவி விலகுங்கள். 

==========================================================================================

Jeyaseelen Anthony: மலாயாப் பல்கலைக்கழக சட்டப்புல ஆலோசகர், பெட்டாலிங் ஜெயா நகராண்மைக்கழக கவுன்சிலர்.