கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பார்த்த சாட்சிகளையும் காலஞ்சென்றவருடைய உறவினர்களையும் நண்பர்களையும் ‘அச்சுறுத்துவதின்’ மூலம் அதனை மறைப்பதற்கு போலீசார் முயலுகின்றனர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் லத்தீப்பா கோயா கூறியிருக்கிறார்.
ஆகஸ்ட் 21ம் தேதி அம்பாங்கில் 26 வயது டி தினேஷ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த சம்பவத்தை பார்த்த நால்வர் அவர்கள் மீதான தடுப்புக் காவல் ஆணை ஆகஸ்ட் 25ம் தேதி காலாவதியானதும் மீண்டும் கைது செய்யப்பட்டு சீ பார்க் போலீஸ் நிலையக்கு அனுப்பப்பட்டதாக லத்தீப்பா இன்று நிருபர்களிடம் கூறினார்.
“இதனைத்தான் ‘தொடர் தடுப்புக் காவல்’ (tukar gari) என அழைக்கப்படுகிறது. தடுத்து வைப்பதற்கான காலத்தை நீட்டிப்பதற்கான உத்தரவு போலீசாருக்கு கிடைக்காவிட்டால் சந்தேகத்துக்குரிய நபர்களை இன்னொரு போலீஸ் தரப்புக்கு மாற்றி விடுவதாகும். அது மாஜிஸ்திரேட் ஆணையை மீறுவதாகும்,” என்றார் அவர்.
அம்பாங் மருத்துவமனையில் தினேஷ் இருந்த போது அவரைப் பார்க்கச் சென்ற இரண்டு உறவினர்களும் நான்கு நண்பர்களும் அங்கு கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் லத்தீப்பா தெரிவித்தார்.
“அவர்கள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்ததே இல்லை. போலீசார் தவறு ஏதும் செய்யவில்லை என்றால் இவ்வாறு செய்வதற்குக் காரணமே இல்லை,” என்றார் அவர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாளைக்கு பின்னர் தலையிலும் கையிலும் மிக அருகிலிருந்து சுடப்பட்டதால் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காரணமாக தினேஷ் மரணமடைந்தார்.
காவல் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பாராங்கத்தியால் தாக்கப்பட்ட பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் கூறுகின்றனர்.