‘டத்தோ விருது டிஏபி-க்கு மிகவும் சிக்கலான பிரச்னை’

டத்தோ விருதுகளுக்காக டிஏபி அரசியலில் ஈடுபடவில்லை என அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறியுள்ளார். ஆனால் அத்தகைய விருதுகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற தனது எழுதப்படாத விதியை மாற்றுவது மீதான அரசிய ரீதியில் உணர்ச்சிகரமான பகுதிக்குள் செல்ல அவர் மறுத்து விட்டார்.

“இது மிகவும் ஆபத்தான கேள்வி. நாங்கள் ஏற்றுக் கொள்வதாகப் பதில் அளித்தால் நாங்கள் விருதுகளுக்காக இருக்கிறோம் என்ற தோற்றத்தைத் தந்து விடும். ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என நான் சொன்னால் நாங்கள் அரச குடும்பத்துக்கு மரியாதை அளிக்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டு விடும்,” என அவர் இன்று காலை கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

டிஏபி மலாய்க்காரர்களுக்கு எதிரானது, அரச குடும்பத்துக்கு எதிரானது என முத்திரை குத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அது மலாய் ஆட்சியாளர்களிடமிருந்து அத்தகைய விருதுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என செக்கிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸ்வீ லிம் தெரிவித்த யோசனைக்கு லிம் பதில் அளித்தார்.

தற்போது டிஏபி பேராளர்களுக்கு எந்த விருதுகளும் கொடுக்க முன் வராததால் அந்த விவகாரம் எழவே இல்லை என்றும் அவர் சொன்னார்.

“அரச குடும்பத்துக்கு நாங்கள் மரியாதை கொடுக்கவில்லை என்ற பிரச்னை இருப்பதாக நான் எண்ணவில்லை . சுல்தான்களும் முதலில் அவற்றைக் கொடுக்க முன் வரவேண்டும். ஆகவே அந்த விவகாரம் எழவே இல்லை,” என்றார் அவர்.

விருதுகளைக் காட்டிலும் மக்களுக்குச் சேவை செய்வதே கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என லிம் தொடர்ந்து கூறினார்.

“நான் saudara (தோழர்) என அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒய்வு பெற்ற பின்னரும் கூட அது எனக்கு போதும்,” என பினாங்கு முதலமைச்சருமான லிம் குறிப்பிட்டார்.

2010ம் ஆண்டு இறுதி வாக்கில் டிஏபி-யின் சுங்கை பினாங்கு சட்டமன்ற உருப்பினர் தெங் சாங் கிம்-முக்கு டத்தோ விருது வழங்கப்படவிருப்பதாக ஆரூடங்கள் எழுந்த போது அரசாங்க விருதுகள் பற்றிய சர்ச்சை  எழுந்தது.

என்றாலும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் என்ற முறையில் அவரது பணிகளுக்காக சிலாங்கூர் அரண்மனையின் பரிந்துரையின் பேரில் நேரடியாக வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியிடப்பட்ட பின்னர் தெங் அதனை ஏற்றுக் கொள்வதை கட்சி எதிர்க்கவில்லை.

 

TAGS: