“பாராங்கத்திகளை வைத்துள்ள மக்கள் மட்டுமே ஏன் போலீசாரைத் தாக்குகின்றனர் ? போலீசாரை யாராவது நம்புகின்றனரா?”
நேரில் பார்த்தவர்கள்: போலீசார் ஆயுதம் இல்லாத மனிதர் மீது அருகிலிருந்து சுட்டனர்
ஒடின்: அந்தச் சம்பவம் திரைப்படக் காட்சிகளைப் போன்றுள்ளது. அடையாளம் இல்லாத ஒரு கார் உங்கள் காரை வழி மறிக்கிறது. சாதாரண உடையில் இருந்த சிலர் அதிலிருந்து இறங்குகின்றனர். உங்கள் மனதில் என்ன ஒடும் ?
அவர்கள் போலீஸ்காரர்களாக இருந்து நீங்கள் அவர்களை தாக்கினால் நீங்கள் தவறு செய்ததாகி விடும். நாம் எப்போதும் சரியானதை செய்வதில்லை. ஆனால் போலீசார் சரியானவர்கள்.
இந்தச் சம்பவத்தில் போலீசார் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளவே இல்லை. எச்சரிக்கை விடுக்காமல் சுட்டுள்ளனர். சுடப்பட்டவர் இந்தியர் என நாம் அறியும் போது நமக்கு அது வியப்பைத் தரவில்லை.
யாப் சிஎஸ்: பாராங்கத்திகளை வைத்துள்ள மக்கள் மட்டுமே ஏன் எப்போதும் போலீசாரைத் தாக்குகின்றனர் ? ‘கிரிமினல்கள்’ எனக் கருதப்படுகின்றவர்கள் துப்பாக்கிகளை வைத்துள்ள போலீசாரைக் கண்டதும் (சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ள வேளையில்) அதனை செய்ய முடியுமா ? போலீசார் தரும் விளக்கத்தை யாராவது நம்புகின்றனரா ?
AkuMelayuIslam: அரச மலேசிய போலீஸ் படை சம்பந்தப்பட்ட எந்த ஒரு சம்பவத்திலும் போலீஸ் தரும் விளக்கங்களை நான் நம்புவதில்லை. பெரும்பாலான மலேசியர்களுடைய எண்ணமும் அதுதான் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
கேடி: இது வழக்கமாக போலீஸ் திரிக்கும் கதை ஆகும். அந்த விவகாரம் மீது சுஹாக்காம் விசாரணையைத் தொடங்க வேண்டும்.
சபா மனிதன்: போலீஸ் படையில் ஏதோ ஒரு ‘பிசாசு’ நுழைந்து விட்டதாகத் தெரிகிறது. அந்தப் பிசாசு எல்லா இடங்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்புக்கும் மாற்றத்துக்கும் நாம் பிரார்த்தனை செய்வோம்.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: இவ்வளவு நடந்தும் இந்தியர்கள் ‘நஜிப்பின் நம்பிக்கையில்’ நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தியர் உயிருக்கு மதிப்பே இல்லை. ஒர் இந்தியர் சந்தேகத்துக்குரியவர் என்றும் கிரிமினல் நோக்கமுடையவர் என்றும் கருதப்படுகின்றது. ஆகவே முதலில் சுட்டு விட்டு பின்னர் கதையை ஜோடிப்பது போலீஸ்காரர்களுடைய நடைமுறையாகி விட்டது.
கேகன்: மற்ற இனங்களைக் காட்டிலும் இந்தியர்களே அதிக அளவில் போலீஸ் முரட்டுத் தனத்துக்கு இலக்காகின்றனர். அரசாங்க மாற்றம் மட்டுமே போலீசாரை கட்டுக்குள் கொண்டு வரும்.
இருந்தும் சில இந்தியத் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு ‘பக்காத்தன் பிஎன் -னைப் போன்று மோசமானதே’ எனச் சொல்லி மக்களைக் குழப்ப முயலுகின்றனர்.
உங்களுக்கு சமூக நீதி வேண்டுமானால் முதலில் பிஎன் -னை விரட்டுங்கள். அடுத்து கோரிக்கைகளை எழுப்புங்கள். உங்களுக்கு விரும்பியது கிடைக்காததால் பக்காத்தான் வாக்குகளை பிளவுபடுத்துவது மறைமுகமாக பிஎன் -னுக்கு உதவுவதாகும்.
பெர்சே@428: இந்த விவகாரத்தில் மஇகா மௌனம் சாதிக்கிறது. எந்த பாதுகாப்பான இடத்தில் கட்சித் தலைவர் போட்டியிடப் போகிறார் என்ற கதைகள் பற்றியே அவர்கள் அதிகம் கவலைப்படுகின்றனர்.
ஹிண்ட்ராப்பும் அமைதியாக உள்ளது. பிஎன் எளிதாக வெற்றி பெறும் பொருட்டு நேரடிப் போட்டிகளை மும்முனைப் போட்டிகளாக்கும் பொருட்டு பக்காத்தான் போட்டியிடும் இடங்களில் போட்டியிடவே ஹிண்ட்ராப் விரும்புகிறது.
இந்தியர்கள் 100 விழுக்காடு பக்காத்தானுக்கு வாக்களித்து அம்னோ வேட்பாளர்களுடன் மஇகா, ஹிண்ட்ராப் வேட்பாளர்களையும் விரட்டி விட வேண்டும். எல்லாம் போதும் போதும்.
ஒஸ்கார் கிலோ: இது தான் அசிங்கமான உண்மை- போலீசார் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். போலீசார் முதலில் உண்மையாக நடந்து கொண்டு (தொடக்கத்தில் அது போலீசுக்குக் காயத்தை ஏற்படுத்தினாலும்) பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையில் உறவுப் பாலத்தை அமைக்க வேண்டும். புலி வருது, புலி வருது என அவர்கள் பல முறை கூக்குரல் எழுப்பி விட்டனர். அதனால் பொது மக்கள் அவர்கள் சொல்வதை நம்புவது இல்லை.
2Be or Not 2Be: அந்த சட்டப்பூர்வ ‘சம்சிங்’களிடமிருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. என் மலேசியாவில் என்ன நடக்கிறது ?
குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாகக் காட்டுவதற்காக குற்றப் புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு செய்வதால் குற்றச் செயல்கள் இல்லை என அர்த்தமாகி விடாது. மெர்தேக்கா தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மலேசியனாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேனா ? மலேசியாவில் வாழ்வது பாதுகாப்பானது என்ற உணர்வு எனக்கு இன்னும் உள்ளதா ?