சைனாய்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமான ‘Himpunan Hijau Raub’க்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் வேளையில் போலீஸ் ஒரு வழியாக ரவூப் நகர மய்யத்தில் உள்ள காற்பந்துத் திடலில் அதனை நடத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சைனாய்ட் தடை நடவடிக்கைக் குழு உறுப்பினர்களும் ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட் வான் ஒஸ்மானும் நேற்று இரண்டு மணி நேரம் சந்தித்த போது அந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரவூப், ஜாலான் புக்கிட் கோமான், பாடாங் காம்ளக்ஸ் சுக்கான் அல்லது பாடாங் மைலோ என அழைக்கப்படும் திடலில் செப்டம்பர் 2ம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அந்தப் பேரணி நடைபெறும்.
என்றாலும் அந்தத் தங்கச் சுரங்கத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக அந்தக் குழுவின் ஆலோசகர் தான் ஹுய் சுன் கூறினார்.
“நாங்கள் ஊர்வலமாகச் செல்வதற்கு போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. அதற்கு பதில் எங்களிடமிருந்து மகஜரைப் பெற்றுக் கொள்ள பேராளர் ஒருவரை அனுப்புமாறு தங்கச் சுரங்கத்தை ஒசிபிடி கேட்டுக் கொண்டுள்ளார்,” என தான் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
எல்லாத் தரப்புக்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்வதாக வான் முகமது கூறியதாக நேற்று குழு விடுத்த அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
“போலீசார் கொடுக்க முன் வந்ததை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அதில் மாற்றம் ஏதும் இருந்தால் கூட்டத்தினர் தங்கச் சுரங்கத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லும் சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை,” என அந்த அறிக்கை எச்சரித்தது.
அந்தத் தங்கச் சுரங்கம் பயன்படுத்தும் சைனாய்ட் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்றும் அதற்கு அருகில் வாழும் மக்களுக்கு பல வகையான நோய்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் வலியுறுத்தும் புக்கிட் கோமான் மக்கள் அந்தக் குழுவை அமைத்துள்ளனர்.