ஹுடுட் சட்டத்துக்காக அரசமைப்புச் சட்டத்தை பாஸ் திருத்தும் என சொல்லவில்லை என்கிறார் மாட் சாபு

 புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க கூட்டரசு அரசமைப்பை தமது கட்சி திருத்தும் எனத் தாம் சொன்னதாக  வெளியாகியுள்ள செய்தியை பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மறுத்துள்ளார்.

நடப்புச் சட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க வேண்டும், கூட்டரசு அரசமைப்புக்கு ஏற்ப இருக்க வேண்டும், பக்காத்தான் உறுப்புக்கட்சிகளின் இணக்கமும் வேண்டும் என்று மட்டுமே தாம் சீன நாளேடான சின் சியூ-வுக்கு அளித்த பேட்டியில் சொன்னதாக அவர் விளக்கினார்.

“ஹுடுட் சட்டத்தை நாடாளுமன்றத்துக்கு  நாங்கள் கொண்டு செல்லப் போவதாகச் சொல்லவே இல்லை,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

ஹுடுட் அமலாக்கம் மீது நாடாளுமன்றத்தில் தீர்மானம் சமர்பிக்கப்பட்டாலும் எம்பி-க்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் அதனை நிறைவேற்ற முடியாது என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சொன்னார்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமலாக்குவதற்கு முன்னர் மலேசியாவில் நல்ல ஆளுமையும் சமூக நீதியும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாஸ் அதிகாரத்துவ ஏடான Harakahவிடம் பேசிய மாட் சாபு, சீன நாளேடு தமது வார்த்தைகளைத் திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

“அதன் நிருபர் என்னை அழைத்தார். அவரது பாஹாசா மலேசியா சரளமாக இல்லை. அதனால்தான் நான் சொன்னது ஒன்று அவர் எழுதியது வேறு ஒன்று,” என அவர் குறிப்பிட்டதாக ஹராக்கா கூறியது.

புத்ராஜெயாவை பாஸ் கைப்பாற்றுமானால் ஹுடுட்டை அமலாக்க அது அரசமைப்புச் சட்டத்  திருத்தத்தை நாடும் என  முகமட்-டின் அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்ட சின் சியூ குறிப்பிட்டது.

இதுதான் அந்த இஸ்லாமியக் கட்சியின் நிலை என்றும் டிஏபி-யும் முஸ்லிம் அல்லாத எம்பி-க்களும் ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்றும் அவர் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“டிஏபி-யும் முஸ்லிம் அல்லாத எம்பி-க்களும் ஆட்சேபித்தால் அது அவர்களது சுதந்திரம். இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அதனை நம்புமாறு முஸ்லிம் அல்லாதார்களை கட்டாயப்படுத்த முடியாது.”

‘அந்த நிலையை மலேசியர்கள் ஆதரிப்பர் என பாஸ் கருதுகிறது. அரசமைப்பைத் திருத்த பெரும்பாலான எம்பி-க்கள் ஒப்புக் கொள்ளா விட்டால் பாஸ் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும். நடப்பு ஷாரியா சட்டத்தை தொடரும்,” என்றும் மாட் சாபு சொன்னார்.

ஆங்கில மொழி நாளேடான தி ஸ்டாரும் அதே செய்தியை இன்று வெளியிட்டுள்ளது.

‘திரங்கானுவில் ஹுடுட் அமலாக்கப்படும்’

இதனிடையே திரங்கானுவில் பாஸ் ஆட்சிக்கு வருமானால் அங்கு ஹுடுட் அமலாக்கப்படும் என திரங்கானுபாஸ் இளைஞர் தலைவர் முகமட் நோர் ஹம்சா கூறியிருக்கிறார்.

“ஆம் நாங்கள் ஹுடுட்டை அமலாக்குவோம். ஏனெனில் சுல்தான் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அரசாங்கத் தகவல் ஏட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது,”( 1999ல் வெற்றி பெற்று திரங்கானு மாநிலத்தை பாஸ் ஆட்சி செய்த போது) என அவர் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றத் தவறினாலும் திரங்கானுவில் ஹுடுட்டை அமலாக்க முடியும் என்றார் அவர்.

“இஸ்லாம் மாநில அரசாங்கத்தின் கீழ் வருவதால் எந்தப் பிரச்னையையும் நான் காணவில்லை,” என்றும் முகமட் நோர் சொன்னார்.

அடுத்த தேர்தலில் கூட்டரசு நிலையில் பக்காத்தான் அதிகாரத்துக்கு வருமானால் ஹுடுட்டை எதிர்க்கும் பக்காத்தான் தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் புக்கிட் பாயூங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

2002ம் ஆண்டு திரங்கானுவை பாஸ் ஆட்சி செய்த போது மாநில சட்டமன்றம் ஹுடுட் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் கூட்டரசு அரசாங்கம் ஆட்சேபித்ததால் அது அமலாக்கப்படவில்லை.

2004ம் ஆண்டு பிஎன் மாநில அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர் அதே நிலை தொடர்ந்தது.

 

TAGS: