நஸ்ரி: பிஎன் மூவரை கண்டிக்க வேண்டும் என்ற யோசனையை அமைச்சரவை நிராகரித்தது

1950ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை வெளிப்படையாக ஆட்சேபித்ததற்காக மூன்று முக்கிய பிஎன் தலைவர்களைக் கண்டிக்க வேண்டும் என ஆகஸ்ட் 15ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் யோசனைகள் தெரிவிக்கப்பட்டதை பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் அந்த யோசனைகளை ஏற்றுக் கொள்வதில்லை என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா, இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் கான் பிங் சியூ, அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் ஆகியோரே அந்த மூவரும் ஆவர்.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என நஸ்ரி சொன்னதாக சீன நாளேடான ஒரியண்டல் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வெளிநாட்டில் இருந்ததால் கூட்டத்துக்கு முஹைடின் தலைமை தாங்கினார்.

“அப்போது பிரதமர் இங்கு இல்லை. ஆகவே இன்று (புதன் கிழமை) பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவை அந்த விஷயத்தை விவாதித்தது என்றும் மேல் நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது,” என அவர் அந்த பத்திரிக்கையிடம் கூறினார்.

அந்த மூவரையும் கண்டிக்க வேண்டும் என்ற யோசனையை ஆகஸ்ட் 15ம் தேதி கூட்டத்தில் அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

“அந்த இரண்டு துணை அமைச்சர்களுடைய நடவடிக்கையும் அரசாங்க நிலைக்கு எதிரானது என்பதால் பிரதமர் அல்லது துணைப் பிரதமர் அவர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கூட யோசனை தெரிவிக்கப்பட்டது.”

“அந்த இரண்டு துணை அமைச்சர்களையும் கைரியையும் பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை செவிமடுப்பதோடு அரசாங்க விளக்கத்தையும் அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.”

ஆனால் அந்தத் தகவலை கைரியும் நஸ்ரியும் பின்னர் நிராகரித்து விட்டனர்.

“கண்டிக்கும் விவகாரம் ஏதுமில்லை. உங்கள் தகவல் முழுமையானது இல்லை அல்லது இன்று ஏதாவது நடந்திருக்க வேண்டும்,” என கைரி நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார். அவர் அன்று காலை நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றி அவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம்.

நேற்று அவர் நஸ்ரியையும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லையும் சந்தித்து சர்ச்சைக்குரிய அந்தத் திருத்தத்துக்குத் தமது ஆட்சேபத்தைத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் அரசாங்கம் தனது நிலையில் உறுதியாக இருப்பதாக கைரியிடம் தெரிவிக்கப்பட்டது.

 

TAGS: