தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்க, பெர்சே

தேர்தல் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), சீரமைப்புகளை ஆராய்வதுடன் தேர்தல் ஆணைய(இசி)த்திலும் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)யிலும் ஏற்படும் தொழில்நுட்பக் குறைகளுக்குத் தீர்வு காணவும் முயல வேண்டும்.

இவை கவலை தருவதாக  பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் ஏ.சுப்ரமணியம் பிள்ளை இன்று கூறினார்.

மாற்றரசுக் கட்சியும் மலேசியாகினியும் ஒரு தவற்றைக் கண்டுபிடித்துக் கூறியவுடனேயே அவற்றின் கட்டகங்கள்  செயலற்றுப் போய்விடுகின்றன.

பின்னர் அவை மீண்டும் செயபடத் தொடங்கும்போது தவறுகள் திருத்தப்பட்டிருக்கின்றன என்று சுப்ரமணியம் கூறினார்.

“இணையத்தள கட்டக அமைப்புக்கு மில்லியன் கணக்கில் செலவிடப்படுவதால் இந்தக் குறைபாடுகள் ஏன் நிகழ்கின்றன என்பதையும் பிஎஸ்சி ஆராய வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

இப்படி நடப்பது குடிமக்களையும் வாக்காளர்களையும் பதிவுசெய்யும் பொறுப்பைக் கொண்டுள்ள அரசுத் துறைகளுக்கு அழகல்ல என்றும் இதனால் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மீதுள்ள நம்பிக்கையும் குறைகிறது என்றாரவர்.

வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களின் உண்மையான தகுதி குறித்து பாஸ் கேள்வி எழுப்பி அதை மலேசியாகினி கவனப்படுத்தியபோது என்ஆர்டி, இசி இணையத்தளங்கள் செயலற்றுப் போனது பற்றிக் கருத்துரைத்தபோது சுப்ரமணியம் இவ்வாறு கூறினார்.

TAGS: