பிரதமர்: பக்காத்தானை நிறுத்த ‘சாலைத் தடுப்பை’ போடுங்கள்

அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கு எதிர்த்தரப்புக் கூட்டணி முயலுவதை முறியடிக்க ‘அரசியல் தடையை’ அனைத்து பிஎன் உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களும் கூட்டாக ஏற்படுத்த வேண்டும் என நஜிப் ரசாக் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்யும் போது பிஎன் கூட்டணி பெரிய அளவிலும் பெருமிதத்துடனும் வெற்றி அடையும் என்றார் அவர்.

“அவை (எதிர்க்கட்சிகள்) ‘புத்ராஜெயாவுக்கான பாதை’ எனச் சொல்லலாம். ஆனால் நாங்கள் புத்ராஜெயாவுக்கு அவை செல்வதை நிறுத்த விரும்புகிறோம். நாங்கள் போலீஸ் சாலைத் தடுப்புக்களை அமைக்க விரும்பவில்லை. நாங்கள் அரசியல் சாலைத் தடுப்பை அமைப்போம். ஏனெனில் புத்ராஜெயா இருக்கையில் அமருவதற்கு அவற்றுக்குத் தகுதி இல்லை.”

“புத்ராஜெயாவை மேம்படுத்தியது நாங்கள். அவை பொய்க்கு மேல் பொய்யாக சொல்லிக் கொண்டிருப்பதால் அவற்றுக்குத் தகுதி இல்லை. அவை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திட்டங்கள் எனக் கூறப்படும் அவற்றின் வாக்குறுதிகள் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கின்றன,” என அவர் புத்ராஜெயா அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்த போது கூறினார்.

புத்ராஜெயா அம்னோ தொகுதி புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத்தின் பேராளர் சின்னமாகும். ஆகவே அதன் வெற்றி அல்லது தோல்வி நாட்டின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை நிர்ணயம் செய்யும் என்றும் நஜிப் சொன்னார்.

“நாம் 2008 பயங்கர அரசியல் கனவிலிருந்து விழித்துக் கொண்டு விட்டோம். தியாகங்கள் மூலம் நமது அரணை வலுப்படுத்திக் கொண்டுள்ளோம். ஆகவே நாம் நமது வேறுபாடுகளைக் களைந்து நிர்வாகம் தொடர்ந்து பிஎன் கரங்களில் இருப்பதை உறுதி செய்வதற்கு போராடுவோம்,” என்றார் அவர்.

அந்த நிகழ்வில் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மான்சோர், பிஎன், அம்னோ தலைமைச் செயலாளரும் புத்ராஜெயா அம்னோ தொகுதித் தலைவரும் புத்ராஜெயா எம்பி-யுமான  தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

TAGS: