இவ்வாண்டு பேரா மாநில கெஅடிலான் கட்சியின் திறந்த இல்ல ஹரிராயா விருந்து நிகழ்ச்சியில் அன்வார் இப்ராகிமின் உரையில் மலாய்காரர்கள், இந்தியர் மற்றும் சீனர்கள் யாரும் வந்தேறிகள் அல்ல. அனைவரும் மலேசியர்களே என்று கூறியுள்ளார். இது நாள்வரை மற்ற சமுகங்களுக்கு அம்னோவால் மறுக்கப்பட்டு வந்த அங்கீகாரத்தை, சுதந்திரத்தின் முழு உரிமையை, பக்காத்தான் வழங்கியுள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மேலும், பக்காத்தானின் இவ்வாண்டு சுதந்திர நாள் சுலோகமான ஒரேமக்கள், ஒரேதேசம், ஒரேமூச்சு என்பது ஒற்றுமையைப் பலப்படுத்துவதில் அதன் நேர்மையை உணர்த்துகிறது. அனைத்து மக்களாலும் குறிப்பாக இந்திய, சீனச் சமூகங்களால் வரவேற்கப்பட வேண்டிய ஒரு கருத்து இது.
எனது சொந்த நாட்டில் எனக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதால் நான் அடைந்துள்ள வேதனைகள் அதிகம், இதே வேதனையை மற்ற இனச் சகோதரர்களும் அனுபவித்திருப்பார்கள் என்றால் மிகையாகாது. இதற்கு முடிவுக்கட்ட மலேசியர்களுக்கு 55 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்பதனை எண்ணும் போது இந்நாட்டின் தலைமைத்துவத்தை எண்ணி வெட்கப்படாமலிருக்க முடியாது என்றாரவர்.
மற்ற இனங்களை அன்னியர்களாக எண்ணி, நடத்தி வந்த அம்னோவின் இன வாதத்திற்குச் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அம்னோவின் இனவாதம், இந்த மண்ணில் முற்றாக புதைக்கப்படும் வரை போராட வேண்டும். அதற்கு நாம் ஒன்றுபட்டு அன்வாரின் கைகளைப் பலப்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
பக்காத்தான் புத்ராஜெயாவை கைப்பற்றினாலும் தாம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கப் போவதாகவும், மக்கள் வரி பணத்தை வீணடிக்கும் சொகுசான புத்ரா ஜெயா அரண்மனையைத் தாம் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தனது சொந்த வீட்டிலேயே இருந்து பணியாற்ற விருப்பதாக அறிவித்திருப்பது, இந்நாட்டின் வளப்பத்தில், மக்கள் வாழ்வில் அவர் கொண்டுள்ள உறுதியான ஈடுப்பாட்டையும், அற்பணிப்பையும் நன்கு உணர்த்துவதாக உள்ளது.
அவரின் இந்த அறிவிப்பு மிக ஆழமானது. அவரின் அமைச்சரவையும் அரசாங்க அதிகாரிகளுங்கூட சிக்கனமான முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
ஏற்கனவே மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்க பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, எரிபொருள் விலை குறைப்பு, டோல் கட்டண நீக்கம், கார்களின் விலை குறைப்பு, அடிப்படை ஊதியம், முதியோர் நலத் திட்டங்கள் எனப் பற்பல திட்டங்களை அன்வார் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஊழலை ஒழித்து ஆடம்பரத்தைக் குறைத்தால் மக்கள் வாழ்வில் சுமையைக் குறைக்கலாம் என்பதனை இன்றைய மத்திய பாரிசான் ஆட்சிக்கு உணர்த்துவதாக இவ்வறிவிப்புகள் எல்லாம் அமைந்துள்ளது.
இந்த முறையை பக்காத்தான் ஆட்சியிலுள்ள மாநிலங்கள் இப்பொழுது கடைப்பிடித்து வருவதையும், வீண் விரையங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டு, அதன் பயன் மக்களுக்குச் சென்று சேரும் பல திட்டங்களை பக்காத்தான் மாநில அரசுகள் நிறைவேற்றி வருவதை மக்கள் அறிவார்கள். அதற்கு மேலும் மெருகூட்டுவதாக அன்வார் இப்ராகிமின் ஹரிராயா பெருநாள் அறிவிப்பு அமைந்துள்ளது.
இருபது ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மகாதீர், அரசாங்க வேலைகளிலிருந்து முற்றாக நம்மை ஒதுக்கித் தள்ளினார். அதுமட்டுமின்றி தனது கனவுத் திட்டமான புத்ரா ஜெயாவில் இந்திய இனமே இருக்கக்கூடாது என்று வெறியில் நூற்றாண்டுக்காலம் இந்நாட்டு மேம்பாட்டுக்கு உழைத்த 4 தோட்டங்களைச் சார்ந்த தொழிலாளர்களை, வேலைகளிலிருந்து நீக்கி, குடியிருப்புகளிலிருந்து அகற்றி, புத்ரா ஜெயாவுக்கு வெளியிலுள்ள டிங்கிலில் எந்தத் தொழில், கல்வி, சமூகப் பாதுக்காப்புமின்றி ஒதுக்கித் தள்ளினார். அதனால், ஒரு தலைமுறையே முறையான கல்வியின்றி, தொழிலின்றி திக்குத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
நாடு வளர்ந்தாலும் நமக்கு அதில் பங்கில்லை என்ற அம்னோவின் உள்ளுணர்வுகளை எடுத்துக்காட்டும் இது போன்ற செயல்களுக்கு ஆதாரங்கள் நிறையவே உண்டு. ஆனால் இன்று கடப்பாட்டினை நிறைவேற்றி விட்டதாக சுதந்திர தின கொள்கையைப் பறைசாற்றி வருகிறார் பிரதமர். அவர்களிடம் மக்கள் கேட்க வேண்டியது யாருடைய கடப்பாட்டினை நிறைவேற்றியுள்ளார்? மக்களை பிரித்தாளும் அம்னோவின் கடட்பாட்டையா? நீதிக்காக, சமத்துவத்திற்காக, சுதந்திரத்திற்காக போராடிய மலேசிய மக்களின் கடப்பாட்டினையா?
இந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினரை மாற்றானாக நடத்துவதுதான் அவர்களின் கடப்பாடு என்றால் அதனை மஇகா, மசீச, பிபிபி, கெரக்கான் போன்றக் கட்சிகள் ஏற்றுக்கொண்டு விட்டனவா என்பதனையும் அவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.