நாட்டின் மேம்பாட்டு வடிவம் மக்களுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்வதோடு மக்களுடைய மகிழ்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
“மக்களிடம் நிறையப் பணம் இருந்தாலும் அவர்கள் காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இரவில் குற்றச் செயல்கள் நிகழக் கூடும் என்ற கவலையில் மூழ்கியிருந்தால் மகிழ்ச்சிக் குறியீடு மோசமாக பாதிக்கப்படும்,” என அவர் புத்ராஜெயாவில் இன்று பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்த மாதாந்திரக் கூட்டத்தில் கூறினார்.
தனி நபர் வருமானத்தில் ஏற்றம் ஏற்படும் போது மகிழ்ச்சி குறியீட்டிலும் அதே அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் மேம்பாட்டு வடிவம் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ முழுமையாக படியாக்கம் செய்யப்படவில்லை. அது நமது சொந்த புதுமையான வடிவம் என நஜிப் விளக்கினார்.
அதனை அடைவதற்கு அரசாங்க ஊழியர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களும் அவற்றின் அமலாக்கமும் தங்கு தடையின்றி தொடர முடியும் என பிரதமர் குறிப்பிட்டார்.
“நமது வேகம் தேக்கமடைய அனுமதிக்க வேண்டாம்,” என்றும் அவர் நினைவுபடுத்தினார்.
ஒரு காலத்தில் தமது நிவாகத்தை குறை கூறி வந்த அனைத்துலக ஊடகங்கள் கூட இப்போது அந்த வேகத்தை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன என்றார் நஜிப்.
அவர் குறிப்பாக எந்த உதாரணங்களையும் கூறவில்லை என்றாலும் ‘அங்கீகாரம் அளிக்கும் மூன்றாம் தரப்பு’ என அவர் கூறிக் கொண்ட அந்நிய ஊடகங்கள் மலேசியாவின் ‘உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்’ பாராட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
மெர்தேக்கா ஊர்வலத்திலும் கொண்டாட்டங்களிலும் பங்கு கொள்ள அரசுச் சேவைத் தலைவர்கள் கொண்டிருந்த விருப்பத்தையும் பிரதமர் அங்கீகரித்தார். .மக்களுடைய அவாக்களைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் களத்தில் இறங்க அரசு ஊழியர்கள் தயாராக இருப்பதையே அது காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வேகம் தொடர்ந்து நிலை நிறுத்தப்படுவதற்கும் அந்த உணர்வை அரசாங்க ஊழியர்கள் தொடர்ந்து பின்பற்றுவர் என்றும் நஜிப் நம்பிக்கை தெரிவித்தார்.