இந்த நாட்டில் குற்றப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்ப்பட்டு தவறான தோற்றத்தைத் தருவதால் மலேசியா தென் கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடு என பெமாண்டு “பொய்” கூறுவதை மீட்டுக் கொள்ள வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.
போலீஸ் குற்றப்புள்ளி விவரங்களில் தில்லுமுல்லு செய்துள்ளது எனக் குற்றம் சாட்டிய அனாமதேயக் கடிதத்திற்குப் பதில் போலீஸ் அளித்த விவரங்களே அந்தக் குற்றச்சாட்டுக்களை “உறுதிப்படுத்தியுள்ளன” என்று அவர் சொன்னார்.
“அந்த போலீஸ் புள்ளி விவரங்களின் கீழ் 2007ம் ஆண்டு 209,572-ஆக இருந்த குற்றங்கள் எண்ணிக்கையை 2011ல் 157,891-ஆக குறைக்கப்பட்டுள்ளன. அது குற்ற எண்ணிக்கை 24.7 விழுக்காடு சரிந்துள்ளதைக் காட்டியது,” என புவா விடுத்த அறிக்கை கூறியது.
ஆனால் அது வெளியிடப்படாத “அட்டவணை சாராத குற்றங்கள்” காரணமாக கிடைத்த சரிவாகும்.
அந்த “அட்டவணை சாராத குற்றங்கள்” எண்ணிக்கை அதே கால இடைவெளியில் 42,752-லிருந்து 72,106-ஆக உயர்ந்துள்ளது. அது 68.7 விழுக்காடு உயர்வைக் குறித்தது.
பெமாண்டு தனது 2011ம் ஆண்டுக்கான அறிக்கையிலும் பல விளக்கக் கூட்டங்களிலும் மலேசியா, தென் கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடு என்றும் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 2011ம் ஆண்டுக்கான அனைத்துலக அமைதிக் குறியீட்டில் நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் இருப்பதாகவும் கூறிக் கொண்டுள்ளது.
2011ம் ஆண்டுக்கான உலக நீதித் திட்டத்தின் சட்ட ஆட்சிக் குறியீட்டில் மேல் நடுத்தர வருமானத்தைக் கொண்ட 19 நாடுகளில் மிகவும் பாதுகாப்பான நாடாக மலேசியா குறிக்கப்பட்டுள்ளதாகவும் அது சொல்லிக் கொண்டது.
அந்த இரண்டு அங்கீகாரங்களின் அடிப்படையில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ( NKRA ) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பெமாண்டு தெரிவித்தது.
ஆனால் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான NKRA-யின் கீழ் அரசாங்க உருமாற்றம் அமலாக்கம் செய்யப்பட்ட முதல் ஆண்டான 2010ல் அதிகாரத்துவ அட்டவணைக் குற்றங்கள் எண்ணிக்கை 15.4 விழுக்காடு சரிந்துள்ளது. ஆனால் அதே வேளையில் அட்டவணை அல்லாத குற்றங்கள் எண்ணிக்கை 21.5 விழுக்காடு கூடியுள்ளது என புவா சொன்னார்.
“2007ம் ஆண்டு தொடக்கம் அரச மலேசியப் போலீஸ் புள்ளிவிவரங்களின்படி மொத்தக் குற்றங்கள் எண்ணிக்கையில் ‘அட்டவணை அல்லாத’ குற்றங்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது சந்தேகத்தைத் தருகிறது.”
“அந்த ‘அட்டவணை அல்லாத’ குற்றங்கள் எண்ணிக்கை 2007ல் 16.09 விழுக்காடும் 2008ல் 21.9 விழுக்காடும் 2009ல் 22.8 விழுக்காடும் 2010ல் 29.8 விழுக்காடும் 2011ல் 31.4 விழுக்காடும் கூடியுள்ளன.”
“அட்டவணைக் குற்றங்கள் கணிசமாகக் குறைந்திருப்பதற்கும் ‘அட்டவணை அல்லாத’ குற்றங்கள் அதிகமாக கூடியிருப்பதற்கும் இடையில் ஏதோ குளறுபடி இருப்பதாகத் தெரிகிறது என புவா சொன்னார்.
அட்டவணைக் குற்றங்களை அந்த ‘அட்டவணை அல்லாத’ குற்றங்களாக போலீஸ் தொடர்ந்து மறுவகைப்படுத்தியுள்ளது என அனாமதேயக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை அது உறுதி செய்கிறது என்றார் அவர்.
‘நடைமுறையை உடனடியாக மறு ஆய்வு செய்யுங்கள்’
சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நன்னெறிகளுக்கு முரண்பாடான குற்றங்கள், அலுவலகக் குற்றங்கள் உட்பட எல்லா வகையான குற்றங்களும் குற்றப் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படுவதாக டிஏபி பிரச்சாரப் பிரிவுச் செயலாளருமான புவா குறிப்பிட்டார்.
“பிரிட்டனில் சமூக எதிர்ப்பு நடத்தைகள் கூட போலீஸ் இணையத் தளத்தில் குற்றப் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.”
“மலேசியாவில் கொள்ளை ஆயுதம் மறைக்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக ஏன் ‘அட்டவணை அல்லாத’ குற்றமாக வகைப்படுத்தப்படுகிறது என்பது மக்களுக்கு புரியவே இல்லை.”
ஆகவே குற்றப் புள்ளிவிவரங்களை தொகுக்கும், வகைப்படுத்தும் மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை பெமாண்டு உடனடியாக மாற்ற வேண்டும் என புவா வலியுறுத்தினார்.