ஆதாரச் சட்டத்தின் 114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் தமக்கும் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லாவுக்கும் உறுதி அளித்துள்ளதாக இளைஞர் விளையாட்டுத் துணை அமைச்சர் கான் பிங் சியூ கூறுகிறார்.
அந்தச் சட்டத்தின் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள தம்மையும் சைபுடினையும் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நேற்று தமது அலுவலகத்துக்கு அழைத்ததாக அவர் சொன்னார்.
அந்தச் சந்திப்பின் போது முஹைடினும் அப்போது உடனிருந்த பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் அந்த வாக்குறுதியை கொடுத்ததாக கான் சொன்னார்.
அவர் மலேசியாகினிக்கு தொலைபேசி வழி அளித்த பேட்டியில் அவ்வாறு கூறினார்.
“எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நஸ்ரியின் வார்த்தைகளை நம்புகிறோம். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். நான் முன்கூட்டியே தீர்ப்புக் கூற விரும்பவில்லை,” என்றார் அவர்.
“ஆகவே அரசாங்கத்தில் ஒர் அங்கம் என்னும் முறையில் ஆதாரச் சட்டத்தை நிலை நிறுத்துவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்,” என்றும் கான் சொன்னார்.
நிரபராதிகள் மீது வழக்குத் தொடுக்கும் அளவுக்கு சட்ட அமலாக்க அமைப்புக்கள் ‘முட்டாள்கள்’ அல்ல எனக் குறிப்பிட்ட கான் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அந்த விஷயத்தை மீண்டும் எழுப்பப் போவதாகவும் சொன்னார்.
ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவின் கீழ் ஒர் இணையத் தளத்தில் நடத்தப்படும் எந்த ‘சட்ட விரோத நடவடிக்கைக்கும்’ அதன் உரிமையாளரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
அத்துடன் எந்த இணைய கட்டுரையுடன் தென்படும் ஒருவருடைய பெயர் அல்லது படம் அந்த வெளியீட்டின் உரிமையாளர் என கருதப்படும். அதனை இல்லை என மெய்பிப்பது குற்றம் சாட்டப்பட்டவருடைய கடமையாகும்.
‘ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரையில் நிரபராதி’ என்ற கோட்பாட்டுக்கு அந்தத் திருத்தம் முரணானது என்று அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.