தேசியக் கொடி மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக கோத்தா அலம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரனை டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் அதன் தலைவரும் டிஏபி உதவித் தலைவருமான தான் கோக் வாய் அதனை அறிவித்தார்.
தொடர்பு கொள்ளப்பட்ட போது அந்த முடிவுக்கு எதிராகத் தாம் முறையீடு செய்து கொள்ளப் போவதாக மனோகரன் கூறினார். அது குறித்து மேலும் கருத்துக் கூற அவர் மறுத்து விட்டார்.
“பொருத்தமற்ற நடவடிக்கையை வெளியிட்டதற்காகவும் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் தரத்தை நிர்ணயிப்பவருமான ஒருவருக்கு அது அழகல்ல என்பதாலும் அவர் ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். அந்த இடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது..” என தான் நிருபர்களிடம் கூறினார்.
பிற்பகல் மூன்று மணி தொடக்கம் இரவு ஏழு மணி வரை கூடிய குழு, தவறு செய்யும் கட்சித் தலைவர் ஒருவருக்கு அது பொருத்தமான தண்டனை என கருதுவதாகவும் அவர் சொன்னார்.
மனோகரன், காயப்படுத்தக் கூடிய தமது கருத்துக்களை மீட்டுக் கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ள போதிலும் அவரது செய்த குற்றம் கடுமையானது என்றும் அதற்குத் தண்டனை அவசியம் என்றும் குழு உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது வாதத்தை சமர்பிப்பதற்கு குழுவின் முன்பு ஆஜராகுமாறு அந்த கோத்தா அலாம் ஷா உறுப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் ஆஜராக மறுத்து விட்டார். கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு முடிவு செய்ய அவர் விட்டு விட்டார்.
தேசியக் கொடி பிஎன் -னைப் பிரதிநிதிப்பதாக தாம் கருதுவதால் தேசிய விடுமுறை நாளன்று ஜாலுர் கெமிலாங்கிற்குப் பதில் தாம் டிஏபி கொடியை விநியோகம் செய்யப் போவதாக மலேசியா தினத்துக்கு முதல் நாளன்று தமது பேஸ் புக் பக்கத்தில் மனோகரன் செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றவர்களும் அரசியல் அரங்கில் இரு தரப்பிலும் உள்ள அரசியல்வாதிகளும் அவரது கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.