போலீசார் இவற்றையும் ‘தேச நிந்தனை’ என அழைப்பார்களா ?

பிரமுகர்களுடைய படங்களை மிதித்தற்காக, ஒரு சம்பவத்தில் படத்தின் மீது ஒர் இளைஞன் தனது பிட்டத்தைக் காண்பித்ததற்காக போலீசார் முதன் முறையாக தனிநபர்களை வேட்டையாடும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாளன்று டாத்தாரான் மெர்தேக்காவில் அத்தகைய அவமரியாதையான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவர்கள் சிலர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். ஒரு நிகழ்வில் குற்றம் புரிந்ததாக கூறப்பட்ட இளம் வயதுப் பெண் ஒருவருக்கு கை விலங்கு மாட்டப்பட்டது.

போலீசார் அந்த 11 பேரையும் தேர்வு செய்து வழக்குத் தொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைகள் வெகு வேகமாக நடத்தப்படுகின்றன.

ஆனால் தாங்கள் எந்தப் பக்கமும் சாயவில்லை என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டால் பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் சம்பந்தப்பட்ட அது போன்ற சம்பவங்களையும் விசாரிப்பதாகவும் போலீசார் உறுதி கூறியுள்ளனர்.

பிரமுகர்களுக்கு அவமரியாதை செய்வது 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வருவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் சட்ட அமலாக்கம் எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை என்பதைக் காட்டுவதற்கு மலேசியாகினி ஆவணக் காப்பகத்திலிருந்து எடுக்கப்பட்ட சம்பவங்கள் பட்டியலை உங்களுக்குத் தருகிறோம்

லிம் குவான் எங்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தமது நிர்வாகத்தின் கீழ் பல முதன் முறையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அடிக்கடி பெருமை அடித்துக் கொள்வார். அவர் இப்போது புதிய பெருமை ஒன்றையும் இணைத்துக் கொள்ளலாம்- ‘குறைந்த கால இடைவெளிக்குள் முதலமைச்சர் என்ற முறையில் அதிகமான ஆர்ப்பாட்டங்களை எதிர்நோக்கியவர்’ என்பதே அதுவாகும்.

ஆர்ப்பாட்டங்கள் பல வகையாக இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒரே மாதிரியானது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதோடு அவரை அவமானப்படுத்துவதும் அதில் அடங்கும்.

பல முறை அவரது படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. மிதிக்கப்பட்டுள்ளன. கழிவுகள் வடிவத்தில் அவருக்கு கேக்குகள் கூட அனுப்பப்பட்டுள்ளன. அவரது வீட்டுக்கு முன்னால் அவருக்கு போலியான ஈமச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

அந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை அனவைரும் அறிவர். அவர்களில் சிலரை ஊடகங்கள் கூட மேற்கோள் காட்டியுள்ளன.

அவர்களுடைய தலைவர்கள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வழி நடத்தியுள்ளனர். ஆனால் இது வரை யார் மீதும் வழக்குப் போடப்படவில்லை.

லிம்-முக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நிகழ்வதால் அவர் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறார்.

அம்பிகா ஸ்ரீனிவாசன்

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான போராளியாக மாறிய இந்த முன்னாள் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் பெர்சே கூட்டணியில் ஆற்றிய பணிக்காக ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளதோடு மட்டுமின்றி எதிரிகளையும் தேடிக் கொண்டுள்ளார்.

அந்த எதிரிகள் ஜுலை 9ம் தேதி அவரது வீட்டு வாசல் வரைக்கும் வந்தனர். ஏப்ரல் 28 பெர்சே 3.0 பேரணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் பேர்கர்களை தயார் செய்ததுடன் தங்கள் பின்புறத்தை ஆட்டிக் காட்டும் உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார்கள்.

பிரபலமான உணவு விடுதிகளை நடத்துகின்றவரும் ஆடம்பரக் கார் விற்பனையாளருமான ஜமால் முகமட் யூனுஸ் தலைமையில் சென்ற ஒரு குழு அம்பிகா வீட்டுக்கு முன்னாள் கடைகளை அமைப்பதற்கான மஞ்சள் நிறக் கோடுகளையும் போட்டது.

சேதத்தை ஏற்படுத்தியதற்காக அந்தக் கும்பல் மீது கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த மஞ்சள் கோடுகள் மீது சாயம் பூசுவதை மட்டுமே அது செய்தது.

அதற்கு முன்னதாக பெர்சே 3.0 பேரணியை நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க கோலாலம்பூரில் பெர்க்காசா கூட்டம் ஒன்றை நடத்தியது. அப்போது அம்பிகா உருவப்படத்தை கொண்ட சுவரொட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

ஏப்ரல் மாதம் Jaringan Melayu Malaysia என்ற அமைப்பு மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தில் ஒரினச் சேர்க்கைக்கு எதிராக கூச்சல் போட்டுக் கொண்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அப்போதும் அம்பிகா உருவப்படத்துக்கு எரியூட்டப்பட்டது. மிதிக்கப்பட்டது.

நிக் அப்துல் அஜிஸ், அப்துல் ஹாடி அவாங்

அந்த இரண்டு உயர் நிலை பாஸ் தலைவர்களும் அதிகமாக குறி வைக்கப்படவில்லை என்றாலும் அவர்களுடைய படங்களைக் கொண்ட பதாதைகள் மீது பல இளைஞர்கள் சிறுநீர் கழித்ததை பாஸ் உறுப்பினர்கள் இன்னும் மறக்கவில்லை.

ஷா அலாமில் அந்த பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. மேலே காணப்படும் படத்தில் சிறுநீர் வழிவதை தெளிவாக காண முடியும்.

அதனைச் செய்தவர்களில் ஒருவர் பிஎன் டி சட்டையை அணிந்திருந்தார்.

லிம் கிட் சியாங்

பாஸ் உள்ள தமது சகாக்களைப் போன்று டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அவரது படத்தின் மீது மக்கள் சிறுநீர் கழித்துள்ளனர்.

ஒரு சம்பவம்  2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாட்டுத் தலை ஒன்று சம்பந்தப்பட்ட உணர்ச்சியைத் தூண்டும் ஆர்ப்பாட்டத்திற்காக 12 தனிநபர்கள் மீது விசாரணை நடைபெற்ற ஷா அலாம் நீதிமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் நிகழ்ந்தது.

காலித் சாமாட்

‘அல்லா என்னும் சொல்லை கிறிஸ்துவ வெளியீடு ஒன்றில் பயன்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு ஷா அலாம் எம்பி காலித் சாமாட் இலக்கானது வினோதமானதாகும்.

முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்வதாக காலித் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் இஸ்லாமிய சமயத்தை “குதப்புணர்ச்சி’ செய்ததாக குற்றம் சாட்டும் பதாதை ஒன்றும் அங்கு காணப்பட்டது.

காலித் படத்தைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்படுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்போது உறுதி செய்தார்கள். இந்தச் சம்பவம் சிலாங்கூர் மாநில பள்ளிவாசல் வளாகத்திற்குள் நடைபெற்றது.

பேராக்கின் சுயேச்சையான மூவர்

பக்காத்தான் ராக்யாட்டும் முழுக்க முழுக்க தூய்மையானதாக இல்லை. 2009ம் ஆண்டு நிகழ்ந்த பேராக் டிஏபி மாநாட்டின் போது அது தெரிந்தது.

அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக் மாநிலத்தை பிஎன் கைப்பற்றுவதற்கு வழி வகுத்த மூன்று முன்னாள் பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்களுடைய படங்களை கொண்ட பெரிய பதாதை நுழைவாயில் பாயாக விரிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பதாதையின் மீது நின்று கொண்டிருப்பது போல படம் பிடிக்கப்பட்டவர்களில் லிம் கிட் சியாங்-கும் ஒருவர். ஆனால் அவரது புதலவர் லிம் குவான் எங் அதனை மிதிக்காமால் தாவிச் சென்றார்.

அந்த நடவடிக்கையை அனைத்து கட்சி உறுப்பினர்களும் அங்கீகரிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்ட பேராக் டிஏபி தலைவர் ங்க்கே கூ ஹாம் அதனைக் கண்டிக்கவில்லை.

கோ சூ கூன்

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய பினாங்கு பிஎன் தலைவர் கோ சூ கூன் -க்கும் புக்கிட் பெண்டேரா அம்னோ தொகுதித் தலைவர் அகமட் இஸ்மாயிலுக்கும் இடையில் மூண்ட சிறிய தகராறு கெரக்கானுக்கும் அம்னோவுக்கும் இடையில் உறவுகளைச் சீர்குலைக்கும் அளவுக்கு விரிவடைந்தது.

இறுதியில் பினாங்கு அம்னோ தலைமையகக் கட்டிடச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கோ -வின் பெரிய படம் உடைக்கப்பட்டது.

அகமட் பத்திரிகையாளர் சந்திப்பில் அனல் பறக்கப் பேசிய பின்னர் அவருடைய ஆட்களில் ஒருவர் அந்த படத்தின் சட்டத்தை உடைத்து படத்தை கிழித்தெறிந்தார். அதனை பல கேமிராக்கள் பதிவு செய்தன.

நஜிப் அப்துல் ரசாக்

மேலே கூறப்பட்ட சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு நிகழ்ந்தவை லேசான சம்பவங்களே.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்கலைக்கழக சுதந்திரம் கோரி 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது அவரது படம் பொறிக்கப்பட்டிருந்து ஒரு கொடி இறக்கப்பட்டது.

அதனை செய்த மாணவர் தலைவரான அடாம் அலி என்பவரை பின்னர் போலீசார் விசாரித்தனர். மூன்று தவணைகளுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். கிரிமினல் நடவடிக்கை ஏதும் அவர் மீது எடுக்கப்படவில்லை.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் அதே மாணவர்கள் இன்னொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவர்கள் நல்லடக்கச் சடங்குகளுக்கான மலர் வளையம் வைக்கப்பட்டிருந்த நஜிப், உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின் ஆகியோரது படங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று குப்பைத் தொட்டிக்குள் வீசினர்.

 

TAGS: