மருட்டல் விடுக்கப்பட்டாலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமை இருக்கும்

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் மெய்க்காவலருக்கு நேற்று மருட்டல் கிடைத்த போதிலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமையன்று தனது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும்.

அந்த மெய்க்காவலருக்கு மிரட்டலை விடுக்கும் அழைப்பு கிடைத்தது. அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்பதை அன்வாரும் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி நிக் மாஹ்முட்டும் இன்று உறுதி செய்தனர்.

“அம்னோ இளைஞர் பிரிவும் பெர்க்காசாவும் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை பிரதமரும் உள்துறை அமைச்சரும் கண்டிக்காதது கண்டு பக்காத்தான் ராக்யாட் மிகவும் வருத்தமடைந்துள்ளது. அவை லெம்பா பந்தாய், அலோர் ஸ்டார், கோத்தா பாரு, ஜாசின் ஆகியவற்றில் நிகழ்ந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது,” என அன்வார் சொன்னார்.

“பிட்டத்தைக் காட்டிய சம்பவம் பற்றியும் படங்கள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றியும் பிரதமர் கருத்துரைத்துள்ள வேளையில்- அவற்றை நாங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை- எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. நமக்கு ஒரே மலேசியா ஆனால் இரண்டு சட்டங்கள் இருக்கின்றன என்னும் தோற்றத்தை அது தருகின்றது.”

மெய்க்காவலரான அகமட் பாவ்சி மாட்பாப்-பை தொலைபேசியில் அழைத்த மலாய் ஆடவர் ஒருவர்  இவ்வாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: “ஹலோ சகோதரரே, நீங்கள் ஜோகூருக்கு வந்து சேரும் போது நான் உங்களுக்காக பிஸ்டலுடன் காத்திருப்பேன்.” ( “Hello Bro, when you arrive in Johor, I will wait for you with a pistol.”).

2008ம் ஆண்டு தொடக்கம் அன்வாருடன் இருந்து வரும் அகமட் பாவ்சி திட்டமிட்டபடி ஜோகூருக்கு செல்லவிருப்பதால் போலீசில் புகார் செய்துள்ளார்.

பிகேஆர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகள் கண்டிப்பதாக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறினார்.

“பிஎன்-னுக்கு முன்னதாக கூட்டணி (Alliance) இருந்த போது 1969ம் ஆண்டு பாஸ் கட்சியும் இதே சூழ்நிலையை எதிர்நோக்கியது.   அம்னோவின் அத்தகைய போக்கும் முரட்டுத்தனமான நடவடிக்கைகளும் மீண்டும் திரும்பியுள்ளதாக தோன்றுகிறது” என அவர் சொன்னார்.

TAGS: