ஹூடுட் சட்டம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த டிஎபி விரும்புகிறது

ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து விவாதிக்கவும் ஒரு முடிவு எடுக்கவும் ஓர் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபி பக்கத்தான் கூட்டணியைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஓர் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்படுவதை தமது கட்சி எப்போதுமே எதிர்க்கும் என்று கூறிய டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங், பக்கத்தான் அலுவலகம் ஓர் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த  விவகாரம் எவ்விதத் தீர்வும் இன்றி தள்ளிப்போடுவது பக்கத்தான் மீதான மக்களின் நம்பிக்கை, குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களிடையே, கடுமையாகச் சிதைந்துவிடும் என்றாரவர்.

“ஓர் அவசரக் கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டு இப்பிரச்னையில் பக்கத்தானின் நிலைப்பாடு என்ன என்பதைப் பகிரங்கமாக விளக்குவதோடு, இச்சர்சை முடிவாக தீர்க்கப்பட வேண்டும்”, என்று கர்பால் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

இவ்வார தொடக்கத்தில், கிளந்தான் மாநில மந்திரி புசார் நிக் அசிஸ் நிக் மாட் இஸ்லாமிய ஆட்சி  அமைத்தல் மற்றும் ஹூடுட் சட்டம் பற்றிய திட்டம் ஆகியவற்றிலிருந்து பாஸ் பின்வாங்காது என்று கூறியிருந்தார். மேலும், இவற்றை டிஎபி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது எதிர்க்கட்சிகளின் கூட்டணியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்று அவர் கூறியதாக சொல்லப்பட்டது.

ஆனால், குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான கர்பால் சிங், இஸ்லாமிய ஆட்சியை மலேசியாவின் எந்த ஒரு பகுதியிலும் அமைக்க முடியாது ஏனென்றால் மலேசிய அரசமைப்புச் சட்டம் அதனை அனுமதிக்கவில்லை என்றார்.

-பெர்னாமா

TAGS: