பராமரிப்பு அரசாங்கம் தொடர்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழு முன்மொழிந்துள்ள நெறிமுறைகள் 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படலாம் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியிருக்கிறார்.
இறுதியாக்கப்பட்டு வரும் அந்த நெறிமுறைகளில் ‘செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை’ போன்ற அம்சங்களும் அடங்கியுள்ளதாக அவர் சொன்னார்.
அவற்றைப் பராமரிப்பு அரசாங்கம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் அரசியல்வாதிகளும் தேர்தல் முகவர்களும் பின்பற்ற வேண்டும் என அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
அரசமைப்பிலும் தேர்தல் சட்டத்திலும் அடங்கியுள்ள சட்டங்களிலிருந்து அந்த நெறிமுறைகள் பெரும்பாலும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர், நேற்று பெர்னாமா வானொலி 24ல் ‘Dalam Radar Khas’ நிகழ்வில் நடந்த குழு விவாதத்தில் பங்கு கொண்ட பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அந்த நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டதாகவும் அப்துல் அஜிஸ் சொன்னார்.
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், அதனை அமலாக்குவதற்கு முன்னர் தேர்தல் சட்டத்தை திருத்த வேண்டுமா என்பது பற்றி சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்னும் ஆய்வு செய்வதாக தெரிவித்தார்.
“வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர் ஒருவர் வாக்களிக்கத் தகுதி பெற வேண்டுமானால் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தாயகம் திரும்பி ஒரு நாளாவது நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் 2,400 பேர் மட்டுமே வாக்காளர்களாகப் பதிந்து கொண்டுள்ளது குறித்து அப்துல் அஜிஸ் ஏமாற்றம் தெரிவித்தார்.
அதற்கு முன்னர் விவாதத்தில் பேசிய அவர், அடுத்த பொதுத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் 85 விழுக்காடு தயாராகி விட்டதாகத் தெரிவித்தார். செலவையும் நேரத்தையும் மனித ஆற்றலையும் மிச்சப்படுத்தும் பொருட்டு நாடாளுமன்றத்துடன் ஒரே சமயத்தில் மாநிலச் சட்டமன்றங்களும் கலைக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
13வது பொதுத் தேர்தல் குறித்து நடந்த அந்த விவாதத்தில் மசீச மத்தியக் குழு உறுப்பினர் தி கியான் கெர், பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-பெர்னாமா